திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல் ஆய்வாளர் செல்வி மற்றும் காவலர்கள், டோல்கேட் பகுதியில் நேற்று (ஆக. 13) வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில், புதுக்கோட்டையைச்சேர்ந்த அப்துல் ஜாபர் மகன் அலாவுதீன் (39) உள்பட நான்கு பேர் இருந்தனர். அவர்களிடத்தில் நடந்த சோதனையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப்பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக தங்க கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, நடந்த விசாரணையில் அலாவுதீன் தனது ஆசன வாய்ப்பகுதியில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை மறைத்து வைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடமிருந்த பாஸ்போர்ட்டுகளையும், அவர்கள் வந்த காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து, திருச்சி சுங்கத்துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், அங்கு வந்த சுங்கத்துறை அலுவலர்களிடம் கடத்தி வரப்பட்ட தங்கம் மற்றும் அலாவுதீன் உள்பட 4 பேரையும் போலீசார் ஒப்படைத்தனர். மேலும், இவர்கள் துபாயில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வழியாக இந்தியா வந்தது தெரியவந்ததுள்ளது.
இந்நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்புப்படையின் கடுமையான பாதுகாப்புகளையும் மீறி தங்க கடத்தல் நடந்தது அதிர்ச்சி அளிப்பதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த கும்பலில் வேறுயாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க:சாக்கடை அரசியல் செய்வோர் குறித்து பேச விரும்பவில்லை... நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்