திருநெல்வேலி: ஸ்ரீபுரம் பகுதியில் இயங்கிவரும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள இன்வெர்ட்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சற்று நேரத்தில் தீ மளமளவென வங்கி முழுவதும் பரவத் தொடங்கியதால் ஊழியர்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் பாளையங்கோட்டை, பேட்டை ஆகிய நிலையங்களிலிருந்து நான்கு வாகனங்களில் விரைந்துவந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டு மணி நேரமாகப் போராடி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
வங்கிக் கட்டடத்தின் சீலிங் பகுதியில் உள்ள தெர்மாகோல் தீப்பிடித்து எரிந்ததால் வங்கியிலிருந்து அதிக புகை மூட்டம் வெளியேறியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகையாகக் காட்சியளித்தது.
இதையடுத்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் வங்கியின் பின்புறம் உள்ள ஜன்னலை உடைத்து தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று தீயை அணைத்தனர்.
இந்தத் தீ விபத்தில் வங்கியிலிருந்த பல லட்சம் மதிப்பிலான கணினிகள், பணப்பரிவர்த்தனை ஆவணங்கள், நகைக்கடன், வீட்டுக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் ஆவணங்கள் தீயில் கருகி நாசமடைந்ததாகக் கூறப்படுகிறது. சேதமடையாத ஆவணங்கள், பொருள்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாகக் கைப்பற்றினர்.
இது குறித்து வங்கி அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறார்கள். திருநெல்வேலி மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் சுரேஷ் ஆனந்த் கூறுகையில், ”வங்கியில் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, விரைந்துவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டோம்.
பணம் தீயில் கருகியதாக இதுவரை எங்களுக்கு வங்கி சார்பில் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறோம்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: முடிதிருத்தும் நிலையங்களிலும் சாதியப் பாகுபாடா? இது மிகப்பெரிய பிரச்னை - நீதிபதிகள் வேதனை