மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது அல்ல என்பதை விளக்குவதற்காக தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளை சந்தித்து பாஜக தலைவர்கள் கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, விவசாயிகளை சந்திப்பதற்காக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று (டிசம்பர் 20) திருநெல்வேலி சென்றார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கான வருவாய் இரட்டிப்பாகும். விளை பொருள்களுக்களை சந்தைபடுத்தும் போது விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். அவர்கள் நஷ்டமடைவதை தடுக்கவே வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இடைத்தரகர்களை ஒழிக்கவேண்டும், விவசாயிகள் விரும்பும் தொகை அவர்களது பொருளுக்கு கிடைக்க எற்பாடு செய்யவேண்டும் என்பதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது இல்லை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்த சட்டத்தை எதிர்க்கின்றன. இது குறித்து விவசாயிகளுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் விளக்கமளித்தாலும் ஏற்க மறுக்கின்றனர். தமிழ்நாடு முழுவதும் இந்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 1000 கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய பொன். ராதாகிருஷ்ணன், "கிராமங்களை ஒழிக்கவே திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தபட உள்ளன. ஆட்சியில் இருந்த போது கிராமங்களை திமுக கண்டுகொள்ளவில்லை. திமுகவின் சுற்று பயணத்தால், கிராமங்களுக்கு எந்த பயனும் கிடைக்காது. விவசாயிகளையும் கிராமத்தையும் பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை" என்றார்.