தென்காசி: கடையத்தைச் சேர்ந்தவர் மரியஜெகநாதன். இவரது தோட்டத்தில் இரவு 12 மணியளவில் தென்னை மரங்களை யானைகள் பிடுங்கி எறிந்துள்ளன. இதேபோல் அருகில் வசித்துவரும் வின்சென்ட் என்பவரது தோட்டத்திலும் யானைகள் இதேபோன்று தென்னை மரங்களைச் சேதப்படுத்தியுள்ளன.
இது குறித்து மரியா ஜெகநாதன் கூறியதாவது, ”நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் தோட்டத்தைப் பராமரித்து விவசாயம் செய்துவருகிறேன். கடந்த ஆண்டும் என்னுடைய தோட்டத்தில் உள்ள 36 தென்னை மரங்களை காட்டு யானைகள் பிடுங்கி எறிந்து நாசப்படுத்தின.
தற்போதும் காட்டு யானைக் கூட்டம் தென்னை, மா மரங்களைச் சேதப்படுத்தியுள்ளன. இதனால் எனக்கு சுமார் ஐந்து லட்சம் ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
மின் வேலி அமைக்க வேண்டும்
இதனைத் தடுக்கும்வகையில் மின் வேலி அமைக்கக்கோரி பலமுறை அலுவலர்களிடம் வலியுறுத்தியும் அமைக்கப்படவில்லை. எனது தோட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளதால், காட்டு யானைகள் சுலபமாக ஊருக்குள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவருகின்றன. இதனால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பள்ளிக்கரணையில் சதுப்புநில சூழலியல் பூங்கா திறப்பு