திருநெல்வேலி: கல்லிடைக்குறிச்சி பகுதியைச்சேர்ந்தவர், பூவலிங்கம். அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இவரது மூத்த மகன் பத்தாம் வகுப்பும், இளைய மகன் எட்டாம் வகுப்பும் படித்து வந்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா பரவல் காரணமாக, பத்தாம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது.
ஆனால், பள்ளி நிர்வாகம் இந்த மாணவர்களுக்கு மட்டும் தேர்ச்சி போடமாட்டோம் என அறிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பல போராட்டங்களை நடத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட அங்குள்ள தாசில்தார் அலுவலக மாடியிலும், நீர்த்தேக்கத் தொட்டியின் மேலே நின்றும் தற்கொலை மிரட்டல் விடுத்தனர்.
இந்நிலையில் இன்று நெல்லை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு இரண்டு மாணவர்களும் தந்தையுடன் வந்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தனர். அதற்கு நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் மாணவர்கள் இருவரும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் மேலே, மாடியில் ஏறி நின்று, தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்கள், பாளையங்கோட்டை காவல் நிலைய காவலர்கள் ஆகியோர் ’’விரைந்து வந்து தற்கொலை செய்ய வேண்டாம்; கீழே இறங்கி வாருங்கள்’’ என மாணவர்களிடம் தெரிவித்தனர். அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு பள்ளி மாணாக்கர்கள் தற்கொலை முயற்சி