இம்மாதம் 21ஆம் தேதி நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக, காங்கிரஸ் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஸ்டாலின், வைகோ உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் நாங்குநேரி தொகுதியில் விறுவிறுப்பாகப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதே போல் அதிமுக சார்பில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையின் போது முதலமைச்சர் பேசுகையில், “300 கோடி மக்கள் தொகை கொண்ட இரு பெரும் நாட்டுத் தலைவர்கள் மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடத்தியது, மாநில சட்ட ஒழுங்கின் நிலைக்கு எடுத்துக்காட்டு.
அதிமுக அரசை ஒரு காலமும் வீழ்த்த முடியாது. ஸ்டாலின் 122 சட்டப்பேரவை உறுப்பினர்கள் என்று கூறுகின்றார், நான் ஆட்சி அமைக்கும் போதே 122 பேர்தான் இருந்தார்கள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 124ஆக எண்ணிக்கை கண்டிப்பாக உயரும். 2021ஆம் ஆண்டு 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும்.
வேலூர் தேர்தலில் மக்கள் உண்மை நிலையைப் புரிந்து கொண்டனர். ஸ்டாலின் பேச்சை நம்பவில்லை. எனவே, ஆறு தொகுதியில் மூன்றில் அதிமுக கூடுதல் வாக்குகள் பெற்றது. நாங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களை இங்குக் கொண்டுவருவதற்காகச் சென்றோம். அதனை விமர்சிக்கும் ஸ்டாலின், தான் எதற்காக நான்கு மாதத்திற்கு ஒரு முறை வெளிநாடுகளுக்குச் செல்கின்றார் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்” என்றார்.