திருநெல்வேலி: கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 151ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச்சந்தித்த நயினார் நாகேந்திரன், 'அதிமுக கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டம் அனைத்து பெண்களின் வாழ்க்கையில் முக்கியமான திட்டமாக இருந்தது. பெண்களின் திருமணத்திற்கு இந்தத் திட்டம் மிகவும் உதவியாக இருந்தது. இத்திட்டத்தை நீக்கியது மிகவும் வருத்தத்துக்குரியது.
மீண்டும் தாலிக்குத் தங்கம் திட்டத்தை கண்டிப்பாக தொடர வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தப்படும். அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு நடந்த சம்பவம் வருத்தத்துடன் கூடிய செயலாகும்.
இதனால், எதிர்ப்பக்கம் இருந்து வரக்கூடிய கருத்துக்குப் பதில் சொல்லும் சூழல் ஏற்படுகிறது. அதனை யார் உருவாக்குகிறார்கள் என்பது தான் முக்கியம். தமிழ்நாட்டில் யார் எந்த கூட்டணி வைத்தாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அண்ணா நூற்றாண்டு நூலகம் நாட்டின் பெருமை... டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்...