திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் இசக்கி சுப்பையா, ஏற்கனவே ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர். சமீபத்தில் நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இந்நிலையில் இசக்கி சுப்பையா அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்துக்கு நிர்வாகிகள் நியமிப்பது தொடர்பாக, கட்சியினரிடம் பேசும் காணொலி ஒன்று வைரலாகிவருகிறது.
அந்தக் காணொலியில் பேசும் கட்சி நிர்வாகி ஒருவர், ஏற்கனவே இரண்டு முறை சங்கத்தில் பதவி எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததாகவும், இந்த முறையும் தனது பெயரைச் சேர்க்காததால் கடும் அதிருப்தியைத் தெரிவிக்கிறார். அதற்கு, பதிலளித்த இசக்கி சுப்பையா எனக்கு வந்த பட்டியல்படி நிர்வாகிகளை நியமித்துள்ளேன் என்றும், சட்டப்பேரவைத் தேர்தலில், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு தற்போது பதவி கொடுத்துள்ளேன்.
நீங்கள் வேலை பார்த்தீர்களா? கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அடுத்த முறை பார்ப்போம் என்கிறார். அதற்கு கட்சி நிர்வாகி, அடுத்த இரண்டு ஆண்டுகள் நான் வெளியே சென்றுவிட்டால், திரும்பவும் எனக்கு எப்படி பதவி கிடைக்கும் என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்துகிறார்.
உடனே இசக்கி சுப்பையா, வெளியில் சென்றுவந்தவர்கள் எல்லோரும் இன்று முக்கியப் பதவிகளில் இருக்கிறார்கள். உதாரணமாக இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் வெளியே சென்று வந்தவர்கள்தான். அவர்கள் தற்போது தலைவராக இருக்கிறார்கள். எனவே, நீங்களும் பொறுமையாக இருங்கள் என்று சமாதானப்படுத்துகிறார். இந்தக் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: கடவுளாக திகழ்கிறார் பிர்சா முண்டா - பிரதமர் மோடி புகழாரம்