திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெரால்டை ஆதரித்து அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளரும் நடிகையுமான விந்தியா பாளை மார்க்கெட் அருகே திறந்தவெளி வேனில் நின்றபடி பரப்புரைசெய்தார்.
அப்போது பேசிய அவர், “நான் நடிகை என்பதையே மறந்துவிட்டேன். அதிமுகவின் அடிமட்டத் தொண்டன் நான். என்னை உருவாக்கிய சிற்பி ஜெயலலிதாதான். ஊராட்சி உள்ளாட்சி கிராம ஆட்சி நகராட்சி என நல்லாட்சி தந்த முதலமைச்சருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புக்கு அல்வா, வம்புக்கு அருவா!
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி நம்ம குலசாமி. அன்பு காட்டினால் அல்வா வரும் வம்பு காட்டினால் அருவா வரும். வஉசி, சுப்பிரமணிய சிவாவும் மக்கள் சுதந்திரத்துக்காகப் போராடிய பூமி இது. இந்த மண்ணில் எப்போதும் மக்கள் சுதந்திரமாக இருக்க வேண்டுமானால் தயவுசெய்து திமுகவுக்கு ஓட்டு போடாதீங்க.
இங்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் அப்துல் வகாப் அவர் சார்ந்த சமுதாய மக்களுக்கே துரோகம் செய்துள்ளார். இங்கு வஉசி மக்களைக் காப்பாற்ற செக் இழுத்து கஷ்டப்பட்டார். இப்படிப்பட்ட மண்ணில் அப்துல் வகாப் பொய்யான செக் கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளார். ஆனால் நமது வேட்பாளர் ஜெரால்டு இங்கேயே பிறந்து வளர்ந்தவர்.
'கல்லா பெட்டிய தூக்கிட்டுப் போயிருவாங்க'
திமுக ஆட்சியில் கரன்ட் இருக்காது. அதனால் யுபிஎஸ் பேட்டரி, டார்ச் லைட் வியாபாரம் நடப்பதால் போர்டு மாட்டியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர். எலக்ட்ரிக் கடைக்காரர்கள் யாரும் திமுகவை நம்ப வேண்டாம் உங்களுக்கு ஐந்து பைசா வருமானம் வந்தாலும், அவர்கள் வந்து சண்டைபோட்டு கலாட்டா செய்து கல்லா பெட்டிய தூக்கிட்டு போயிருவாங்க.
திமுகவின் கலாட்டா பண்ணாத ஒரே கடை சாக்கடை மட்டும்தான். வராத மழைக்கு வானிலை அறிக்கை வாசிப்பதைப் போன்று வராத ஆட்சிக்கு திமுகவினர் வாக்குறுதி கொடுக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...வாக்கு மையங்களில் கேமரா பொருத்தும் பணி: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தலைமைத் தேர்தல் அலுவலர் சுற்றறிக்கை