திருநெல்வேலி : நம் நாடு ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி ஜெபமணி சாமுவேலின் குடும்பத்தினரிடம் கருத்து கேட்கப்பட்டது.
ஜெபமணி சாமுவேல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆரம்பித்த இந்திய தேசிய ராணுவத்தில் சுமார் 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர். அதைத்தொடர்ந்து இந்திய அரசின் இராணுவத் துறையிலும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்தவர்.
இவர் கடந்த 1975ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். தற்போது இவரது மனைவி எஸ்தர் நட்சத்திரம் ஆரைக்குளத்தில் வசித்து வருகிறார். இவர்களது உறவினர் அஷாரியாவிடம் 75ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் குறித்து கேட்டபோது, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நாம் அதன் பலன்களை முழுமையாக அனுபவிக்கவில்லை.
75 சதவீதம் தான் அனுபவித்து வருகிறோம். முழுமையான சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் நாட்டு மக்கள் இன்னும் தங்கள் உழைப்பை தியாகத்தை நாட்டிற்கு கொடுக்க முன்வரவேண்டும். நாடு சுபிட்சம் பெற வேண்டுமென்றால் மக்கள் தியாகம் செய்ய முன்வர வேண்டும் என்று அறிஞர் அண்ணா கூறினார். அதைத்தான் நானும் கூறுகிறேன் மக்கள் உழைக்க வேண்டும் போராட வேண்டும் தியாகம் செய்ய வேண்டும்” என்றார்.
நெல்லை டவுனை சேர்ந்த ராஜேஷ் நம்மிடம் கூறுகையில், “சாதி மதம் பார்க்காமல் வெள்ளையர்களை ஒழிக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு சுதந்திர காற்றை சுவாசிக்க பல உயிர்களை நாம் பலி கொடுத்துள்ளோம்.
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தற்போது வரை சுதந்திரம் குறித்த உணர்வும் போராட்ட உணர்வும் இளைஞர்களுக்கு பெரிய அளவில் இல்லை. இளைஞர்கள் மத்தியில் மதபரப்புரையை கைவிட வேண்டும்” என்றார்.
வழக்கறிஞர் பிரம்மா கூறுகையில், “நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்தும் இந்தியாவில் பல குக்கிராமங்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கின்றன. சட்டரீதியாக சுதந்திரம் பெற்று இருந்தாலும் மக்களுக்கு சட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை” என்றார்.
இதையும் படிங்க : கர்நாடகா ஜாலியன் வாலாபாக்!