திருநெல்வேலி மாவட்டம், பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் செல்வ சூர்யா அருகில் உள்ள பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி பள்ளியில் கையில் சாதி ரீதியான கயிறு கட்டுவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக மாணவன் செல்வ சூர்யாவுக்கும், அதே பள்ளியில் பயின்று வரும் பிளஸ் 1 மாணவர்கள் மூன்று பேருக்கும் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் மாணவன் செல்வ சூர்யா கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று(ஏப்ரல்.30) உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே மூன்று மாணவர்கள் மீதும் கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதனையடுத்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்த விவகாரத்தில் அலட்சியமாக செயல்பட்ட சம்பந்தப்பட்ட பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வன் மற்றும் ஷீபா பாக்கியமேரி ஆகிய இருவரையும் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: கோயில் திருவிழாவில் மோதல்: இளைஞர் கொலை