தாயின் பாசத்திற்கு இவ்வுலகில் வேறு எதுவும் ஈடு இல்லை. பத்து மாதம் வயிற்றில் சுமப்பது மட்டுமல்லாமல், தனது உயிர்மூச்சு உள்ளவரை உள்ளத்தில் சுமந்து, குழந்தையை ஒரு தாய் வளர்த்து ஆளாக்குகிறார்.
தாய்க்கு நிகர்...
குறிப்பாக இளம் பருவத்தில் தனது குழந்தைக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுப்பதுடன், தனது கைக்குள் வைத்து குழந்தையை தாய் பேணி பாதுகாத்து வருவார்.
மேலும், குழந்தையின் எதிர்காலத்தை கவனத்திற்கொண்டு, அவனது தேவைகளை பூர்த்தி செய்ய போராடுவதையே ஒரு தாய் தனது முக்கிய வேலையாக வைத்திருப்பார். இச்சூழலில் தென்காசி மாவட்டத்தில் 10 வயது சிறுவன் ஒருவன், கண் பார்வையற்ற தனது தாய்க்கு கழிவறை கட்டிக் கொடுப்பதற்காக போராடும் சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாதி சான்றிதழ் இல்லாமல் மருத்துவக் கனவை விட்ட மாணவிக்கு கிடைத்த உதவிக்கரம்!
ஆம், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் பிரபு (10) தான் அவர். அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். பிரபு பிறந்த சில மாதங்களிலேயே அவரது தந்தை முத்துராமலிங்கம் உடல்நலக்குறைவால் காலமானார். பிரபுவின் தாயார் மகேஸ்வரி(44) கண் பார்வையற்றவர்.
சாதனைச் சிறுவன்...
கண் பார்வை இல்லை என்பதால், பிரபு தினமும் தனது தாய் மகேஸ்வரியை கூடவே இருந்து கவனித்து வருகிறார். குறிப்பாக காலையில் எழுந்தவுடன், பல் துலக்க அழைத்துச் செல்வது முதல் மலம் கழிப்பதற்காக திறந்த வெளிக் கழிப்பிடத்துக்கு அழைத்துச் செல்வது என சிறு வயதிலும் தனது தாய்க்கு, பணிவடை செய்து வருகிறார் பிரபு.
இதுபோன்ற இன்னல்களை இச்சுறு வயதில் கையாளும் சிறுவன் பிரபு, படிப்பிலும் படுசுட்டியாக உள்ளான். அதோடு மட்டுமல்லாமல் யோகா, தற்காப்புக் கலைகளில் பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதிக்க துடிக்கும் சிறுவனாக வலம் வருகிறான். இதன்மூலம் பல பரிசுகளையும் அள்ளிச்சென்றுள்ளார்.
1000 ரூபாயில் ஒருமாத செலவு...
கண் பார்வை இல்லாததால் போதிய வருமானம் இல்லாமல், தமிழ்நாடு அரசு வழங்கும் ஊனமுற்றோர் உதவித்தொகை ஆயிரம் ரூபாய் மட்டும் வைத்துக்கொண்டு மகேஸ்வரி தனது வாழ்க்கையை நகர்த்தி வருகிறார். ஒருபுறம் வறுமை வாட்டினாலும், மறுபுறம் சின்ன சின்ன காரியத்துக்குக் கூட மகன் உதவியை நாட வேண்டியுள்ளது என்பதால், மகேஸ்வரி மிகுந்த மன வேதனையில் இருக்கிறார்.
குறிப்பாக ஒரு பெண்ணாக இருந்து கொண்டு திறந்தவெளி கழிவறைக்குச் செல்வதற்கு கூட தனது ஆண் மகனை அழைத்துச் செல்வதால், அவருக்கு ஒரு வித சங்கடங்கள் இருப்பதாக கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறார். தற்போது சிறுவன் என்பதால் பரவாயில்லை தனது மகன் வளர வளர கழிவறைக்கு அழைத்து செல்வது சிரமம் என்பதால் எப்படியாவது வீட்டில் கழிவறை கட்ட வேண்டுமென்பது மகேஸ்வரி மற்றும் பிரபுவின் லட்சியமாக இருந்தது.
கழிவறைக்கு அடித்தளம்...
ஆனால் பணம் இல்லை. இந்த சூழ்நிலையில் சுட்டி பையன் பிரபுவின் திறமைகளை அறிந்தும், தாய்க்கு கழிவறை கட்டவேண்டும் என்ற உணர்வையும் அறிந்துகொண்ட அதேபகுதியைச் சேர்ந்த வீரபுத்திரன் என்பவர் மகேஸ்வரிக்கு உதவி செய்ய முன்வந்தார். அதன்படி வீரபுத்திரன் தனக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் மூலம் நிதி திரட்டி தற்போது பிரபுவின் நீண்டநாள் கனவான கழிவறை கட்டும் பணியை தொடங்கியுள்ளார்.
'ஊரடங்கு தளர்த்தப்படலாம்... எங்களின் வாழ்வாதாரம்?' - கவலையில் நாதஸ்வர கலைஞர்கள்
தற்போது பிரபுவின் வீட்டு முன்பு கழிவறை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வப்போது கிடைக்கும் நிதியை வைத்து வேலையை பார்த்து வருவதாக மகேஸ்வரி தெரிவிக்கிறார். மேலும் இன்னும் பணம் தேவைப்படுவதால் அரசு அல்லது நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் யாராவது உதவினால் எளிதில் கழிவறை கட்டி விடலாம் என்று வேதனையுடன் தெரிவித்தார்.
உதவலாம் வாருங்கள்...
உதவி என்பது எவ்விடத்தில் புதைக்கப்படுகிறதோ, அவ்விடம் விருட்சமாக வெளிவர வேண்டும். ஆம், பிரபு இதற்கு முழு தகுதியுடையவன் தான். தாயை கவனித்துக்கொள்ள யாருமில்லை என்றபோதும், தாயை கவனித்துக் கொண்டே தனது கல்வியையும், இன்னபிற கலைகளையும் இத்தருணத்திலும் விடாமல் பயின்று, பலருக்கு சான்றாய் விளங்குகிறான் பிரபு.
அவன் உழைப்புக்கு பயனாய், அவன் கல்விக்கு உதவியாய், அவன் தாய்க்கு பக்கபலமாய் இயன்றவரை இருப்போம். அதற்கான உதவிகளை செய்வோம். உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் மகேஷ் - 9080878028 (மகேஷ்வரியின் தம்பி மகன்)