சேலம் மாவட்டம் ஆத்தூர் மல்லியகரை அருகே உள்ள சுந்தராபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார். இவரின் தோட்டத்திற்கு, அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பூப்பறிக்க சென்றபோது பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால், சிறுமியின் தாய்க்கும், தினேஷ்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தினேஷ்குமார், தாயின் கண் முன்னே சிறுமியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் ஆத்தூர் டவுன் போலீசாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், தினேஷ்குமார் மீது போக்சோ, கொலை, உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் 2018ஆம் ஆண்டு நடந்தது. இதுதொடர்பான வழக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி முருகானந்தம் இன்று (ஏப்.26) தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், தினேஷ்குமாருக்கு தூக்குதண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: வீட்டில் குடியிருக்கும் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக ஐடி பிரிவு நிர்வாகி கைது