சேலம் மாவட்டம் இளம்பிள்ளையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இளம்பிள்ளை மற்றும் பெருமாகவுண்டம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியர் பழனிசாமி நேற்று முன்தினம் இளம்பிள்ளையை சேர்ந்த இந்துமதி என்பவர் தனது மகனை எட்டாம் வகுப்பில் சேர்ப்பதற்கு வந்தார்.
அப்போது தனியே இருந்தம் தலைமையாசிரியர் பழனிசாமி இந்துமதியிடமும், அவரது மகனிடமும் கனிவாகப் பேசினார். இந்துமதியின் மகனை பள்ளி முழுவதும் சுற்றி பார்த்துவா என கூறி அனுப்பி வைத்தார். பிறகு இந்துமதியிடம், உனது கணவர் என்ன வேலை செய்கிறார்? என கேட்டுள்ளார். அப்போது இந்துமதி தனது கணவர் லாரி ஓட்டுனர் என்றும், கரோனா தொற்று காரணத்தால் வேலைக்கு செல்லாததால் வறுமையில் இருப்பதாக தெரிவித்தார்.
பின்னர் பழனிசாமி இந்துமதியிடம் மாணவரை பள்ளியில் சேர்த்துக் கொள்ள உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி இந்துமதியின் செல்போன் எண்ணை பெற்றுக் கொண்ட பின்னர் இந்துமதியிடம் தனக்கு சொந்தமாக நிலம் இருக்கிறது அதை இந்துமதியும், அவரது கணவரும் கவனித்துக் கொள்ளுமாறும், இந்துமதிக்கு தனியாக இளம்பிள்ளையில் வீடு எடுத்துத் தருவதாகவும், இந்த வீட்டுக்கு அவ்வப்போது வந்து இந்துமதியை சந்தித்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த இந்துமதி தனது மகனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்து அருகில் உள்ளவர்களிடம் பள்ளி தலைமைஆசிரியர் தன்னிடம் தவறாக பேசியது குறித்து தெரிவித்தார். இதில் கோபம் அடைந்த உறவினர்கள் உடனே நேற்று(பிப்.11) பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் பழனிசாமியிடம் இதுகுறித்து கேட்டபோது பழனிசாமிதான் அப்படி ஏதும் தவறாக பேசவில்லை என தெரிவித்தார். இதில் கோபமடைந்த இந்துமதியும் அவரது உறவினர்களும் உடனே இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல்துறையில் புகார் செய்தனர்.
பிறகு இடைப்பாடி கல்வி அதிகாரியிடமும் புகார் செய்தனர். இதனையடுத்து இடைப்பாடி கல்வி அலுவலர் விஜயா பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமியிடம் விசாரணை நடத்தினார். இதன் அறிக்கையை சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்திக்கு அனுப்பி வைத்தார். இதனை நேற்று மாலை விசாரணை செய்த சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி இளம்பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமியை சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் ராமமூர்த்தி நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு உடனே இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று காலை இளம்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் வெங்கடாசலம் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். புகார் செய்த உடனே நடவடிக்கை எடுத்து பள்ளி தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு இந்துமதியும், அவரது உறவினர்களும் நன்றி தெரிவித்தனர்.