சேலம்: பொதுமக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சேலத்தில் திமுக இளைஞரணி செயலாளர்
உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சேலத்தில் திமுக சார்பில் 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு அழைப்பாளராக திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு இலவச அரிசி வழங்கும் பணியை தொடங்கிவைத்தார்.
பின்னர் அவர் பேசும்போது, “கரோனோ காலத்தில் மக்களைச் சந்தித்து அவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கி வருகிறோம். வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் மக்களுடன் இருப்பது திமுக. ஒன்றிணைவோம் வா திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்து, அதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று இலவச அரிசி வழங்கி வருகிறேன்.
சேலம் மாவட்டத்திலும் ஒன்றிணைவோம் வா திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பொதுமக்கள் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வருகிறார்கள். பொதுமக்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கரோனாவை விரட்ட முடியும்” என்றார்.
மேலும் அவர், “நான்செல்லும் இடங்களில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு தருகிறார்கள். சேப்பாக்கம் தொகுதியில் மக்கள் என்னை சொந்தப் பிள்ளையைப் போல பார்க்கிறார்கள்” என்றார்.
இதையும் படிங்க: 'மோடிட்ட பேச போறன்' மீண்டும் பாஜக - சிவசேனா கூட்டணி - ராம்தாஸ் அத்வாலே