மத்திய அரசின் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் நகரப்பகுதிகளில் பயன்படுத்தப்படாத இடங்களையும் மயானங்களையும் சீர்படுத்தி 'நகருக்குள் வனம்' என்ற தலைப்பின்கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது .
குறிப்பாக மயானங்களில் உள்ள காலி இடங்களை சமன்படுத்தி அங்கு பல்வேறு வகையான பழ வகை மரங்கள் நடப்பட்டு ஒவ்வொரு மாநகராட்சி சார்பிலும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சேலம் மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சீலநாயக்கன்பட்டி, சூரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மயானங்களில் பயன்பாடு இல்லாத இடங்களில் ஆயிரக்கணக்கான மரவகைகள் கன்றுகளாக நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள நவீன மயானத்தின் பின்புறம் உள்ள இரண்டாயிரம் சதுர அடி காலி இடத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பூவரசு, புங்கை,வேம்பு ,நாவல், பப்பாளி, கரும்பு, மாதுளை உள்ளிட்ட பல்வேறு வகையான ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு தற்போது ஒவ்வொரு மரக்கன்று பத்தடிக்கு மேல் வளர்ந்துள்ளது.
இவற்றை இன்று(ஜூன் 5) சேலம் மாநகராட்சி ஆணையர் ரெ. சதீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . மேலும் இதே போல சேலத்தில் காலியாக உள்ள இடங்களில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு 'நகருக்குள் வனம்' திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி அலுவலர்களுடம் ஆணையாளர் அறிவுறுத்தினார்.
பின்னர் இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கூறுகையில்," ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நகருக்குள் வனம் திட்டம் சென்ற ஆண்டு சேலம் மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட்டது. தற்போது சீலநாயக்கன்பட்டி யில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு காடு போல தற்போது தோற்றமளிக்கிறது.
இது நகர நெருக்கடியில் உள்ள மக்களுக்கு தூய்மையான ஆக்சிஜனை உருவாக்கித் தரும் அற்புதமான இடமாக உள்ளது இதைப்போல பொதுமக்கள் தங்கள் வாழ்விடங்களில் ஆளுக்கு ஒரு மரம் நட்டு வளர்த்து சேலம் மாநகரை பசுமையான நகரமாக மாற்றிட முன்வரவேண்டும்.
உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று (ஜூன் 5) அம்மாபேட்டை மண்டலத்திலும் நகருக்குள் வனம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுபோல நகர சூழலில் காலியாக உள்ள இடங்கள் மரக்கன்றுகள் நடப்பட்டு சோலையாக மாற்றப்பட்டால் பறவைகளுக்கு உணவு பிரச்சனை வராது. பறவைகள் தங்கி தங்களது இனத்தை பெருக்குவதற்காக இந்த காடுகள் பயன்படும்". என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் ரூ. 2 கோடி மோசடி!