சேலம்: ஓமலூரில் செய்தியாளருக்குப் பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, ”தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் அதிமுக வெற்றிபெறும்.
உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அனைத்துக் கட்சிகளும் பெரும்பாலான இடங்களில் போட்டியிட விரும்புவார்கள். ஆகையால்தான் பாஜகவுடன் உடன்பாடு ஏற்படவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமே அதிமுக, பாஜக தனித்தனியே போட்டியிடுகிறது. தேசிய அரசியலில் பாஜகவுடன் அதிமுக இணைந்து செயல்படும். அப்போதுதான் தமிழ்நாடு வளர்ச்சி பெறும். திமுகவின் எட்டு மாத கால ஆட்சியில் மக்கள் பட்ட துன்பங்களே அதிகம். நலத்திட்டப் பணிகள் எதையும் திமுக அரசு செய்யவில்லை.
அதிமுக ஆட்சியில் கரோனா பரவலைத் தடுக்க அதிகளவில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. தற்போது நோய்ப் பரவலைத் தடுக்க திமுக அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
கடந்த எட்டு மாத கால ஆட்சியில் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களே தினசரி நடக்கின்றன. சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வார்டு பங்கீட்டில் முரண்பாடு: ஜோதிமணி வெளியேறியது குறித்து செந்தில்பாலாஜி விளக்கம்