இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக உள்ளதா என்பது பற்றி ஆண்டுதோறும் பாதுகாப்புப் பிரிவு அலுவலர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று சேலம் சுகவனேஸ்வரர் கோயில் பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கோயிலில் உள்ள சிலைகள், பாதுகாப்பு அறையில் உள்ள ஐம்பொன் சிலைகள் கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களின் நிலை, விழாக்காலங்களில் வழங்கப்படும் பாதுகாப்பு உள்ளிட்டவைகள் குறித்து அலுவலர்களிடம் நேரடியாக கேட்டறிந்தார்.
தொடர்ந்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சுரேஷ், மாநகர காவல் உதவி ஆணையர் பாலசுப்பிரமணியம், கியூ பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜகாளீஸ்வரன், ஆய்வாளர் கோகிலா, மாநில உளவுப் பிரிவு ஆய்வாளர் குமரேசன் உள்ளிட்டோர் ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டனர் .
கோயிலுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு குறித்தும், பண்டிகை கால பாதுகாப்பு தொடர்பாகவும், பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் விரிவாக காவல் துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்தார். மேலும் சுகவனேஸ்வரர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் சிலைகள், தங்க நகைகள், சொத்துகள் பாதுகாப்பு குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இதேபோல சேலத்தில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயில், அழகிரிநாதர் கோயில்களிலும் நாளை பாதுகாப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆய்வு மேற்கொள்வார் என்றும் இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சேலத்திற்கு வயது 155 : ஆர்ப்பாட்டங்களின்றி கொண்டாடப்பட்ட சேலம் தினம்!