கடந்த 50 ஆண்டுகளாக சேலம் மாவட்ட கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக இருந்த மேக்னசைட் எனப்படும் வெள்ளைக்கல் சுரங்கங்கள் மூடப்பட்டு, நான்கு ஆண்டுகளை கடந்து விட்டன. அதனையே நம்பி வாழ்ந்த ஏழை எளிய தொழிலாளர்கள் சுமார் 2,000 பேர் இன்று, மீண்டும் சுரங்கத்தை திறக்க வலியுறுத்தி, இரண்டு மாதங்களாக சுரங்க வாயிலிலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில் வெள்ளைக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் சுமார் 3,000 ஏக்கர் பரப்பளவில் பெரியதும் சிறியதுமாக அமைந்துள்ளன. வெட்டி எடுக்கப்பட்ட வெள்ளை கற்கள் அரைத்து மாவாக்கப்பட்டு கட்டிகளாக ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. 1971 முதல் 2016 வரை இந்த சுரங்கங்கள்தான், டால்மியாபோர்டு, மாமாங்கம், வெள்ளாளப்பட்டி, கருப்பூர், செங்கரடு உள்ளிட்ட 20 கிராமங்களின் பொருளாதார தேவையை பூர்த்தி செய்து வந்தது.
இந்த சூழலில் தான் சுற்றுப்புறச் சூழல் அமைச்சக விதிகளை முறையாக கடைப்பிடிக்காததால் சுரங்கங்கள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், சுரங்கங்களை மீண்டும் இயக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருவதால், இரண்டு தலைமுறையாக சுரங்கத் தொழிலாளர்களாக வாழ்ந்து வரும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்க்கை, தற்போது கேள்விக்குறியாகி வறுமையில் கிடக்கிறது.
மாமங்கத்தில் உள்ள செயில் ரெப்ராக்டரி கம்பெனி, டால்மியா மேக்னசைட், தமிழ்நாடு மேக்னசைட் ஆகிய மூன்று நிறுவனங்களும், தொழிலாளர் விரோதப் போக்கை மேற்கொண்டு நான்கு ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி, தங்களது உரிமைகளை மீட்க சுரங்கத் தொழிலாளர்கள் தற்போதும் போராடி வருகின்றனர்.
இதனிடையே வேலை இழந்து நிற்கும் 2000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் அவர்களின் குடும்பத்தினரும், வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்க எடுத்திருக்கும் முடிவை உணர்ந்தாவது மத்திய மாநில அரசுகள் இவ்விவகாரத்தில் தொழிலாளர்களுக்கான தீர்வை சொல்லியாக வேண்டும்.
இதையும் படிங்க: 'வாக்காளர்களுக்கு அல்வா' - சுயேட்சை வேட்பாளர் சொன்ன சீக்ரெட்