ரோகிணி சென்னை இசை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக மாற்றப்பட்டதால், வேலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் சேலம் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்க உள்ளார். இந்த பணியிட மாறுதலுக்கான ஆணையை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் 7ஆம் தேதி முதல் வேலூர் ஆட்சியராக இருந்துவந்த எஸ்.ஏ. ராமன், வேளாண்மை பாடப்பிரிவில் இளங்கலை பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.
இவர் வருவாய் கோட்டாட்சியராகவும், மாவட்ட வருவாய் அலுவலராகவும் பணியாற்றிய பின், சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பொதுமேலாளர் (நிர்வாகம்), ஆவின் இணை மேலாண்மை இயக்குநர் மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தில் துணை செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
அதன்பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணியில் நியமனம் செய்யப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி அந்தஸ்தில் சென்னை நிலநிர்வாக இணை ஆணையராகவும் இருந்துள்ளார்.