சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள ரேடிசன் ஹோட்டலில் இன்று (ஆக.10) நடந்த தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுக்கூட்டம் இன்று நடந்தது.
பின்னர் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'கரோனா தொற்று முடிந்து இரண்டு ஆண்டுகளுக்குப்பின்னர் தற்போது தான் தியேட்டர்களில் ரசிகர்களின் கூட்டம் வருகிறது. இந்தக் கூட்டத்தின் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி, முதலமைச்சருக்கு தெரிவிக்க இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்கள் உரிமத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை லைசென்ஸ் புதுப்பிக்க கேட்டுள்ளோம். இதேபோல, சினிமா ஆபரேட்டர்களாக, டிப்ளமோ படித்தவர்களை பணியில் அமர்த்த அனுமதி கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
தியேட்டருக்குப் பிறகே ஓடிடி: தமிழ்நாட்டில் சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை. முன்னணி நடிகர் அமீர்கான் தனது படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 6 மாதங்களுக்குப் பிறகே, ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். இதனை வரவேற்கிறோம். தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற நடிகர்கள் இதேபோல தங்களது படங்களை தியேட்டர் ரிலீஸுக்குப் பிறகு, 8 வாரங்கள் கழித்து வெளியிட வேண்டும். இதற்காக நடிகர்கள் தங்கள் படம் ஒப்பந்தம் போடும்போது ஓடிடி தளத்தில் எப்போது வெளியிட வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.
பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் டிக்கெட் கட்டணம் ரூ.500 முதல் 800 வரை உள்ளநிலையில், தமிழ்நாட்டில் தான் டிக்கெட் கட்டணம் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிகபட்ச கட்டணம் 190 ரூபாயாக உள்ளது.
ஆன்லைனில் தான் டிக்கெட்டுகள் விற்கப்படுகிறன்றன. எங்களது கோரிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரை விரைவில் சந்தித்து நேரில் விளக்கம் அளிக்க உள்ளோம். முதலமைச்சர் ஸ்டாலின், எங்கள் மீது அன்பும், பாசமும் கொண்டவர். எங்களது கோரிக்கைகளை அவர் நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம்.
கமலின் விக்ரம் பட வெற்றி - திரையரங்குகளால் மட்டுமே சாத்தியம்: கமலின் 'விக்ரம்-2' மிகப்பெரிய வெற்றியை பெற்றதன் மூலம் அவர் பழைய மார்க்கெட்டை பிடித்திருக்கிறார். ஓடிடி தளத்தில் அவரது திரைப்படம் விக்ரம் திரையிடப்பட்டிருந்தால், இவ்வளவு வரவேற்பு கிடைத்திருக்காது. அதனால், தியேட்டரில் படம் வெளியிடப்படுவதற்கும் ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கும் 8 வார காலம் இடைவெளி வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
தற்போது திரையிடுவது முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டதால் பழைய ஆபரேட்டர் முறை தேவையில்லை என்று உத்தரவிட வேண்டும்; திரை அரங்குகளின் உரிமங்களை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் உத்தரவிட வேண்டும் என 6 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இக்கூட்டத்தில், பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் பொருளாளர் டிசி இளங்கோவன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினர்.
இதையும் படிங்க: போதைப் பொருள் நடமாட்டத்திற்கு துணை போவோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன் - மு.க.ஸ்டாலின்