நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சரவணனை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்களும் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது பொதுமக்கள் அவரின் பேச்சைக் கேட்காமல் எழுந்து சென்றனர். என்றாலும் அதனைப் பொருட்படுத்தாமல் பேச்சைத் தொடர்ந்தார்.
அவரை தொடர்ந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் பேசினார். அவர் தன் உரையைத் தொடங்கியபோது அனைத்து இருக்கைகளும் காலியாகவே இருந்தது. தொண்டர்கள் அவர்களை அமரச் சொல்லியும், அதனைப் பொருட்படுத்தாமல் மக்கள் கலைந்து சென்றனர். அதைத் தொடர்ந்து காலி இருக்கைகளுக்கு முன்பு தன்னுடைய உரையை தொடங்கினார் நிதின் கட்காரி.
அப்போது, வெளியே சென்றவர்களை ஆளுங்கட்சியினர் வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்து வந்து அமர வைத்தனர். இதனால் கைக்குழந்தைகளுடன் கூட்டத்திற்கு வந்தவர்கள் பெரும் அவதிப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு வெளியே சென்றனர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.