அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் புகழேந்தி. அவர் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவதாக சில வாரங்களாகத் தகவல்கள் வெளியாகி வந்தன. இதனையடுத்து கடந்த வாரம் அவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சேலத்தில் உள்ள அவரின் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இதனால் அமமுகவின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்ததாக அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் நடந்தன. இது ஒருபுறம் இருக்க, சேலத்தில் இன்று தனியார் நட்சத்திர விடுதியில் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள அமமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து, சுமார் 200 பேர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தவறு யார் செய்தாலும் தண்டனைதான் - டிடிவி. தினகரன்
இக்கூட்டத்திற்குப் பெங்களூரு புகழேந்தி தலைமை வகித்தார். அமமுகவின் மகளிர் அணியினர், மருத்துவ அணியினர், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினர் எனப் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு தினகரன் தலைமையிலான அமமுகவில் நடைபெறும் குழப்பங்கள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
ஏற்கனெவே கோவை மண்டல அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிருப்தி ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. இந்த தருணத்தில் சேலம் மண்டல அமமுக கூட்டமும் நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் புகழேந்தி தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.