ஓமலூர் அருகேயுள்ள தாரமங்கலம் பேரூராட்சி பகுதியில், குமார் என்பவர் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக மருந்துக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சுமார் 10 மணியளவில், மருந்து வாங்க வந்த ஒருவர் மருந்துகளின் விலை ஏற்றத்தையடுத்து வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து சென்ற அந்த நபர், சிறிது நேரத்தில் 20பேர் கொண்ட கும்பலுடன் வந்து அந்த மருந்துக்கடையை அடித்து நொறுக்கியுள்ளார். மேலும், கடை உரிமையாளர் குமாரையும் அக்கும்பல் தாக்கியதால் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
புகாருக்குப்பின் அங்கு வந்த காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தகராறில் ஈடுபட்டு மருந்துக்கடையை அடித்து நொறுக்கியது, தாரமங்கலம் அருகேயுள்ள கோணகபாடி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிரபு மற்றும் அவரது கூட்டாளிகள் எனத் தெரியவந்துள்ளது. தொடர்ந்து தாரமங்கலம் காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமராவை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்.
பட்டப்பகலில் 20 பேர் கொண்ட கும்பல் மருந்துக்கடையை நொறுக்கிய நிகழ்வு தாரமங்கலம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பிரபு மற்றும் கூட்டாளிகள் மருந்துக்கடையை அடித்து நொறுக்கும் காட்சிகள் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: சேலம் மாவட்ட கோயில்களில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு!