சேலம்: ஊரடங்கு நாட்களில் சமூக வலைதளங்களில் பேசுவதற்கு தலைப்பில்லாமல் இணையப் போராளிகள் அலைந்துக் கொண்டிருக்க, அப்போது வந்தது இந்த கல்யாண பத்திரிக்கை. மணமகன் ஏ.எம். சோசலிசம், மணமகள் பி.மம்தா பானர்ஜி இருவருரின் காதல் திருமணத்தின் அழைப்பிதழ்தான் 'மூன்று ஃபயர்' டாபிக்.
வேர்கள்
சேலம் அருகே உள்ள காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். மோகனின் தந்தை அழகப்பன், தன்னை கம்யூனிஸ்ட் கட்சியில் சிறு வயது முதலே இணைத்துக்கொண்டு அப்பகுதியில் பல்வேறு பிரச்சனைகளுக்காக கொடிப்பிடித்து போராடியவர். மோகனின் தாயார் கமலா, அனைத்திந்திய மாதர் சங்கத்தில் நிர்வாகியாக பல ஆண்டு காலம் செயல்பட்டவர்.
மனித உருவெடுக்கும் சித்தாந்தம்
இதன்காரணமாக, தந்தை அழகப்பனைப் போலவே மோகன், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சிறுவயது முதலே தன்னை இணைத்துக்கொண்டு, அரசியல் பணியாற்றி வருகிறார். அதனால், தனக்கு பிறந்த மூன்று மகன்களுக்கும் கம்யூனிசம், லெனினிசம், சோசலிசம் என்று பொதுவுடைமை தத்துவ பெயரிட்டு தனது பொதுவுடமைக் கொள்கை பற்றை பல ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படுத்தி உள்ளார்.
தற்போது தனது மூன்றாவது மகனான சோசலிசத்திற்கு தமது உறவுக்கார பெண்ணான மம்தா பானர்ஜி என்ற பெண்ணை மணமுடிக்க ஏற்பாடு செய்து அதற்கு அழைப்பிதழ் வெளியிட்டுள்ளார். மம்தா பானர்ஜியின் தாத்தா காங்கிரஸ் பற்றாளர் என்பதாலும், மம்தா பானர்ஜி குறித்த ஈர்ப்பாலும் அவர் பேத்திக்கு அப்பெயரை வைத்துள்ளார்.
மாமன் மகள் மம்தா
கம்யூனிசம், லெனினிசம் ஆகிய இரு மகன்களுக்கும் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) மூன்றாவது மகனான சோசலிசத்திற்கு காட்டூரில் திருமணம் நடைபெறவுள்ளது. மகன் சோசலிசம், தனது மாமன் பழனிச்சாமியின் மகளான மம்தா பானர்ஜியை காதலித்து தற்போது திருமணம் செய்யவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெயரினால் பல அவமானங்கள்
எளிமையான முறையில் நடைபெறும் இந்த திருமணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.
பல வருடங்களாக சித்தாதங்களின் பெயரை தாங்கியுள்ள இவர்களை பள்ளி, கல்லூரிகளில் ஏளனமாக பார்த்த நண்பர்களும், பொதுமக்களும் தற்போது அவர்களை பெருமையுடன் பார்த்து பாராட்டி வருகின்றனர், என்கிறார்கள் மோகன் குடும்பத்தினர்.
பேரன் மார்க்ஸிசம், பேத்தி மார்க்ஸியா
இரண்டாம் மகன் லெனினிசம் தனக்கு பிறந்த குழந்தைக்கு மார்க்ஸிசம் என பெயர் சூட்டியுள்ளார். தனது தந்தை மோகனின் முதல் எழுத்தையும், தன்னுடைய முதல் எழுத்தையும் இனிசியல் ஆக சேர்த்து எம்.எல்.மார்க்ஸிசம் என பெயர் சூட்டி இருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தங்கள் குடும்பத்தில் அடுத்து பிறக்கும் பெண் குழந்தைக்கு மார்க்சியா அல்லது க்யூபாயிசம் என பெயரிடப்போவதாகவும் கூறுகின்றனர்.
கம்யூனிசம், லெனினிசம், சோசலிசம் ஒரு எளிமையாக மக்கள் மத்தியில் புழங்கும்போது, அப்பெயர்கள் குறித்தான ஆர்வமும், சுவாரசியமும் மேலும் பலரை அச்சித்தாந்தத்தை நோக்கி நகர்த்த வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: வாட்ஸ்அப் மூலம் குழு அமைத்து 1000 பேருக்கு உணவளிக்கும் இளைஞர்கள்!