சேலம்: காங்கிரஸின் முக்கியத்தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்ல உள்ளார். இதனையடுத்து இந்த பாதயாத்திரை குறித்த ஆலோசனைக்கூட்டம் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள பிசிசி திருமண மண்டபத்தில் இன்று(செப்.03) நடைபெற்றது. இதில் சேலம் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு, செய்தியாளர்களுக்குப் பேசினார். அதில்,“காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வருகிற 7ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை தொடங்குகிறார்.
காந்தி நினைவகத்தில் இந்த பாத யாத்திரை தொடங்குகிறது. அன்று இரவு நடக்கும் பொதுக்கூட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கிறார்கள். அனைவருக்கும் சம உரிமை உண்டு என்பதை வலியுறுத்துவதற்காக பாதயாத்திரை நடத்தப்படுகிறது. இந்தியப்பொருளாதாரம் படு பாதாளத்திற்குச் சென்று உள்ளது. உள்நாட்டு உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வரும்போது விவசாயிகளுக்கு இரட்டிப்பு வருமானம் தருவோம் என்றும், நெல் கோதுமை கொள்முதல் விலை அதிகரிப்போம் என்றனர். ஆனால், ஒன்றும் செய்யவில்லை. இதையெல்லாம் பாதயாத்திரை மூலம் எடுத்துச்சொல்ல உள்ளோம். இந்த பாதயாத்திரை மூலம் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும். சகோதரத்துவம் ஏற்படும். வெறுப்பு பேச்சு இல்லாமல் போகும்’ இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அவரிடம் தமிழ்நாடு நிதி அமைச்சர் குறித்து கேட்டதற்கு, ’பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு தலைவர் மிகவும் ஆணவத்தோடு பேசியுள்ளார். இது ஆர்எஸ்எஸ் கொள்கை பேச்சாகும். இதைக் கண்டிக்கிறோம். மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத்துறை விசாரிக்கும் என பாரதிய ஜனதா தமிழ்நாடு தலைவர் கூறினார். எதை வைத்து அவர் இப்படி கூறினார்.
இதற்கு உயர் நீதிமன்றம் எந்த அடிப்படையில் செந்தில் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என அமலாக்கத் துறைக்கு கேள்வி கேட்டுள்ளது. ராகுல் காந்தி பங்கேற்கும் பாதயாத்திரை நிகழ்ச்சியில் தோழமைக் கட்சிகளை புறக்கணிப்பதாக தவறான தகவல்களைத்தருகின்றனர். இதில் உண்மை இல்லை. இது காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி.
முதலமைச்சர் ஸ்டாலின் தேசியக்கொடியை எடுத்து, அதை தலைவர் ராகுல் காந்தியிடம் கொடுத்து, பின்னர் பாதயாத்திரை தொடங்கும். மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் பாதயாத்திரையில் உடன் நடந்து செல்ல உள்ளனர்’என்றார்.
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது என கேட்டதற்கு, ’’தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார். இந்த ஒரு வருடத்தில் இயன்ற பணிகளை செய்து முடித்துள்ளார்” என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
இதில் காங்கிரஸ் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, இ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசு, சேலம் மாநகராட்சி துணை மையம் சாரதா தேவி மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பொதுநிகழ்வுகளில் பேச சட்டத்தின் எந்த விதி உங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது?: ஆளுநருக்கு ஆர்.டி.ஐ.யில் கிடுக்கிப்பிடி கேள்வி