இதற்காக சுயேச்சை வேட்பாளர்கள் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே விலைக்கு வாங்குவதற்காக குதிரை பேரம் நடத்தி வருவதாகப் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், அதிமுக கூட்டணி மொத்தமுள்ள 20 ஒன்றியங்களில் 13 ஒன்றியங்களில் மட்டுமே முழு பலத்துடன் வெற்றி பெற முடிந்தது.
பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், நங்கவள்ளி, தாரமங்கலம், மேச்சேரி, ஓமலூர், சங்ககிரி, இடைப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஆகிய 13 இடங்களில் அதிமுக கூட்டணி தலைவர், துணைத்தலைவர் பதவிகளை எந்த ஒரு சிக்கலுமின்றி எளிதில் கைப்பற்றிவிடும்.
எட்டு வழி சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்ட அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக கூட்டணிக்கு 6, திமுக கூட்டணிக்கு 7 இடங்களும் கிடைத்துள்ளன. ஆனால், சுயேச்சையாகக் களமிறங்கிய 6 பேர் வெற்றி பெற்று, தற்போது திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு 'தலைவலி'யை ஏற்படுத்தி உள்ளனர்.
இந்த ஒன்றியத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 19. ஒன்றியத் தலைவர் பதவியைக் கைப்பற்ற குறைந்தபட்சம் 10 பேரின் ஆதரவு தேவை என்பதால், இங்கே சுயேச்சைகளின் ஆதரவின்றி யாரும் தலைவர் பதவிக்கு வந்து விட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திமுக சார்பில் போட்டியிட சீட் கிடைக்காத விரக்தியில் சுயேச்சையாக வைரம் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் செந்திலின் ஆதரவு, திமுக கூட்டணிக்கே கிடைக்கும் என்பதால், திமுகவின் பலம் 8 ஆக உயரும். செந்திலோடு சேர்த்து, திமுகவுக்கு தலைவர் பதவியைக் கைப்பற்ற இன்னும் இரண்டு பேரின் ஆதரவு மட்டுமே தேவை.
அதேபோல் அதிமுக , தலைவர் பதவிக்கு வர வேண்டுமெனில் குறைந்தபட்சம் நான்கு சுயேச்சைகளின் ஆதரவு தேவை என்பதால், இரண்டு கட்சிகளுமே சுயேச்சைகளிடம் தீவிர பேரத்தில் இறங்கியுள்ளது.
அதிமுக தரப்பில் அயோத்தியாப்பட்டணம் மெடிக்கல் ராஜா, அனுப்பூர் மணி ஆகிய இருவருமே அவரவர் மனைவியை அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியில் அமர்த்தி விட களமிறங்கி இருவருக்கும் உள் முரண்பாடு ஏற்பட்டது .
பின்னர் கூட்டுறவு இளங்கோ கவனத்திற்கு இந்த விவகாரம் இருவராலும் கொண்டு செல்லப்பட்டு, இருவரின் உள் முரண்பாடு எதிர்க்கட்சிக்கு சாதகமாகிவிடக் கூடாது என்பதால் அந்தப் பிரச்னையும் இப்போது முடிவுக்கு வந்துள்ளது என்கிறார்கள் அயோத்தியாபட்டணம் அதிமுகவினர்.
அனுப்பூர் மணியின் மனைவி பார்வதியை ஒன்றியத் தலைவர் பதவியும், மெடிக்கல் ராஜாவின் மனைவி சந்திரகலாவுக்கு துணைத்தலைவர் பதவியும் வழங்கலாம் என்று அக்கட்சி மேலிடம் முடிவுசெய்துள்ளதாகவும், அத்துடன் அவர்கள் இருவருக்கும் இடையிலான போட்டிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளன.
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் ஏற்கனவே தொடர்ச்சியாக மூன்று முறை திமுகதான் தலைவர் பதவி வகித்துள்ளது என்பதால், இந்தமுறையும் தலைவர் பதவியைக் கைப்பற்றி, நான்காவது முறையாக தலைவர் நாற்காலியில் அமர அக்கட்சி முழுவீச்சில் இறங்கியுள்ளது.
திமுகவுக்கு போதிய பெரும்பான்மை கிடைக்கும்பட்சத்தில், அக்கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ள ஹேமலதா விஜயகுமார் தலைவராக பதவியேற்பார் என திமுகவினர் மத்தியில் எதிர்பார்பபு எழுந்துள்ளது. அதனால் இந்த முறை அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தைக் கைப்பற்றுவதில் இரு திராவிடக் கட்சிகளும் கடுமையான போட்டியில் களமிறங்கி உள்ளது.
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் குறிப்பிட்ட இரண்டு சுயேட்சைகளிடம் ஆதரவைப் பெற, இரு முக்கிய கட்சிகளுமே 50 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதேபோல, ஆத்தூர் ஒன்றியத்தில் மொத்தம் 14 உறுப்பினர்கள் உள்ளன. இதில் 8 பேரின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ, அக்கட்சியே பதவியை பிடிக்கும். இந்நிலையில், ஆத்தூர் ஒன்றியத்தில் அதிமுக கூட்டணிக்கு 7, திமுகவுக்கு 6, சுயேச்சைக்கு ஒரு இடமும் கிடைத்திருப்பதால், இங்கேயும் சுயேச்சையை வைத்து ஆடுபுலி ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது.
கெங்கவல்லி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 11 இடங்களில் திமுக, அதிமுக தலா 5 இடங்களிலும், சுயேச்சை ஒருவரும் வென்றுள்ளார். இந்த ஒன்றியத்திலும் சுயேச்சையை வளைத்துப்போடும் வேலைகளில் இரு கட்சிகளுமே ஈடுபட்டுள்ளன. கொளத்தூரிலும் ஆளுங்கட்சி கூட்டணி தலைவர் பதவியைக் கைப்பற்ற வெற்றி பெற்றுள்ள இரண்டு சுயேச்சைகளில் குறைந்தபட்சம் ஒருவரின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல், காடையாம்பட்டி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 உறுப்பினர்களில் அதிமுக கூட்டணிக்கு 8 இடங்களும், திமுக கூட்டணிக்கு 4 இடங்களும் கிடைத்திருக்கின்றன. இங்கே 7 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இவர்களில் குறைந்தபட்சம் 2 பேரின் ஆதரவைப் பெற்றால் அதிமுக கூட்டணி எளிதில் தலைவர் பதவிக்கு வந்துவிடும். அதேநேரம், திமுகவுக்கும் தலைவர் பதவிக்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லிட முடியாது. ஆனால் திமுக கூட்டணி தலைவர் பதவிக்கு வர அக்கூட்டணிக்கு இன்னும் 6 சுயேச்சைகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
சேலம் கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒன்றியங்களில் திமுகவுக்கு பலத்த தோல்வி கிடைத்திருக்கிறது. அதனால், மத்திய மாவட்ட திமுகவுக்கு உட்பட்ட காடையாம்பட்டி ஒன்றியத்தில் என்ன விலை கொடுத்தாவது தலைவர் பதவியை பெறுவதில் அக்கட்சியின் மாவட்டத் தலைமை தீவிரமாக இறங்கியுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். பதவியேற்பு முடிந்ததும் சுயேச்சைகளை முக்கிய கட்சிகள் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் சேலம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 10 உறுப்பினர் பதவியிடங்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளுமே தலா 5 இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன. அதேபோல் ஏற்காடு ஒன்றியத்திலும் மொத்தமுள்ள 6 உறுப்பினர் பதவியிடங்களில் இரு திராவிட கட்சிகளும் தலா 3 இடங்களில் வென்றுள்ளன. இவ்விரு ஒன்றியங்களிலும் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு ஆள்களை
இழுக்கும் வேலைகளும் நடந்து வருகின்றது.
ஆதரவு தெரிவிக்கும் சுயேச்சைக்கு திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளுமே குறைந்தபட்சம் ரூ. 15 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ. 30 லட்சம் ரூபாய் வரை முதல்கட்டமாக பேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சுயேச்சைகள் சிலர், இரு திராவிட கட்சிகளிடமும் தங்களின் பேரங்களை உயர்த்தி இருப்பதாகவும் சொல்கின்றனர்.
சுயேச்சைகள் ரூபாய் 50 லட்சம் வரை பேரம் பேசி இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அதிமுக - திமுகவினர் மத்தியில் பரபரப்பு நிலவுகிறது.
இதையும் படிங்க: பதவியேற்பு விழாவில் மரக்கன்றுகளைப் பரிசளித்த ஊராட்சித் தலைவர்!