சேலம்: அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் விரைவில் ரூ. 250-க்கு முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
உலக நீரிழிவு நோய் நாளை முன்னிட்டு, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு கையேட்டினை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், "நீரிழிவு நோயானது உடலில் இன்சுலின் தேவையான அளவு உற்பத்தி செய்யாமல் இருப்பது, செல்லுக்குள் குளுக்கோஸ் செல்ல இன்சுலின் உதவாமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் ஏற்படுகிறது.
முதல் வகை நீரிழிவு நோயாளிகள் தொடர்ச்சியாக இன்சுலினும், இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகள் மாத்திரைகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து அதிகமானால் மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்படுமே தவிர இன்சுலின் செலுத்திக்கொள்வதால் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை. மேலும், இந்நிகழ்ச்சியில் நீரிழிவு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், அவர்களுக்கு ஆலோசனை வழங்குவது குறித்தும் மருத்துவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு நோய் துறையின் மூலமாக ஆண்டுக்கு ஒரு லட்சம் புற நோயாளிகளும், 50 ஆயிரம் உள் நோயாளிகளும் பயனடைந்துவருகின்றனர். நீரிழிவு நோய்க்கு அனைத்துச் சேவைகளும் உள்ள துறையாகச் சேலம் அரசு மருத்துவமனை திகழ்கின்றது.
மேலும், தனியார் மருத்துவமனைகளில் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிவரும் நிலையில் இம்மருத்துவமனையில் ஒரே இடத்தில் அனைத்துவிதமான முழு உடல் பரிசோதனைகளும் 250 ரூபாயில் மேற்கொள்ளும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளது" என்றார்.
முன்னதாக, இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், "முழு உடல் பரிசோதனை செய்யும் திட்டத்திற்குத் தேவையான கருவிகள் வாங்குவதற்கு அரசால் தேவையான நிதியுதவி வழங்கப்பட்டுவருகிறது. மேலும், எனது விருப்பத்தின்பேரில் தன்னுடைய ஊதியத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாய் வழங்குகிறேன்" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை முதல்வர் வள்ளி சத்தியமூர்த்தி, கண்காணிப்பாளர் தனபால், சர்க்கரை நோய் துறை பேராசிரியர், துறைத் தலைவர் உள்ளிட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.