தமிழ்நாட்டில் அடுத்தாண்டு மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பரப்புரைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், நாகை மாவட்டம் திருக்குவளையிலிருந்து 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தடையை மீறி பரப்புரையை நடத்தினார்.
இதையடுத்து, காவல் துறையினர் உதயநிதியை கைதுசெய்ய முற்பட்டபோது, அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் கைதுசெய்யவிடாமல் தடுக்க முயற்சி செய்தனர்.
இதனால் காவல் துறையினருக்கும் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இருப்பினும் காவல் துறையினர் உதயநிதி ஸ்டாலின், அவருடன் இருந்தவர்களை கைதுசெய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, ஒரு மணி நேரத்திற்குப் பின்பு விடுதலைசெய்தனர்.
இதையடுத்து நாகையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை கைதுசெய்ததற்கு கண்டனம் தெரிவித்து, மயிலாடுதுறை கூறைநாடு பகுதி பிரதான சாலையில் திமுக முன்னாள் தெற்கு ஒன்றிய செயலாளர் மூர்த்தி தலைமையில் 30 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதேபோல் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், சாலையில் அமர்ந்து காவல் துறையைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதோடு, கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பள்ளப்பட்டி காவல் துறையினர் சாலை மறியல் ஈடுபட்ட அனைவரையும் கைதுசெய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இதையும் படிங்க:தருமபுரியில் வாக்காளர் திருத்த முகாம்: மாவட்ட ஆட்சியர் கார்த்திகா ஆய்வு