சேலம்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த மாத தொடக்கத்திலிருந்து அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் படிப்படியாக அதிகரித்து நேற்று முன் தினம் ( மே.19 ) வினாடிக்கு 29ஆயிரத்து 075 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நீர்வரத்து நேற்று (மே 20) காலையின் நிலவரப்படி 29ஆயிரத்து 664 கனஅடியாக அதிகரித்தது.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் தற்போது வினாடிக்கு 47 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் எச்சரித்துள்ள நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மேட்டூர் வருவாய் துறையினர் பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 113.66 அடியாக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: 100 அடி உயரத்தில் இருந்து நீர்வீழ்ச்சியில் குதித்த சிறுமி