சேலம்: தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க முறையான முன்னேற்பாடுகளைச் செய்ய திமுக அரசு தவறி விட்டதால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
எனவே உடனடியாக குடியிருப்பு பகுதிகளில் புகுந்து உள்ள மழைநீரை அகற்ற அரசு நடவடிக்கையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று (நவ.29) சேலம் மாநகர அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.
மக்களைப் பாதுகாக்க எந்தவித முன்னேற்பாடும் திமுக அரசு செய்யவில்லை
அப்போது செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "தமிழ்நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சரியாக உணவு விநியோகம் செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ வசதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் வெள்ள பாதிப்பிலிருந்து மக்களைப் பாதுகாக்க எந்தவித முன்னேற்பாடும் திமுக அரசு செய்யவில்லை. மழை குறித்து வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகிறது. முன்னேற்பாடு செய்யாத காரணத்தால் ஆங்காங்கே மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது.
ஸ்டாலின் நாடகமாடுகிறார்
அம்மா உணவகம் மூலம் அதிமுக அரசு ஏழை எளியோர்க்கும் மலிவு விலையில் உணவு கிடைக்க நடவடிக்கை எடுத்தது. அதை முடக்க திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மக்களின் நன்மைக்காகவும் கொண்டுவரப்பட்ட அம்மா உணவகம் திட்டத்தை திமுக அரசு முழுமையாகச் செயல்படுத்த வேண்டும்.
7 தமிழர் பேர் விடுதலை குறித்து கேள்வி கேட்பதற்கு திமுகவிற்கு எந்தத் தகுதியும் இல்லை. திமுக ஆட்சியில், கருணாநிதி தலைமையில், அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. 7 பேர் விடுதலைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது திமுக அரசு. 7 பேர் விடுதலையில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக ஸ்டாலின் நாடகமாடி வருகிறார். உண்மையிலே விடுதலை செய்ய வேண்டும் என்று விரும்பி இருந்தால் அமைச்சரவைக் கூட்டத்திலேயே முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் எடுக்கவில்லை.
செந்தில் பாலாஜி கரூரில் அடாவடி செய்கிறார்
அதிமுக ஆட்சியில் இருக்கும்போது நேர்மையான முறையில் ஆட்சி செய்தோம். ஜனநாயக முறையில் எங்கள் அரசு செயல்பட்டது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு பார்க்கவில்லை.
திமுக அமைச்சர்கள் ஒருமையில் பேசுவதை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் அடாவடி செய்து வருகிறார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தானாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொண்ட 100 வயது மூதாட்டி!