சேலம் மாவட்டம் சின்மேரி வயக்காடு பகுதியில் வெள்ளி பட்டறை நடத்தி வருபவர் முருகன். இந்த வெள்ளி பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டு காலமாக வெள்ளி பட்டறையில் இருந்து அவ்வப்பொழுது வெள்ளி பொருட்கள் காணாமல் போய் வந்ததை அடுத்து முருகன் தனது வெள்ளி பட்டறையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தமிழரசன் பட்டறையில் இருந்து வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் தெரியவந்தது. இதையடுத்து முருகன் தனது நண்பரான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு பகுதி செயலாளர் கதிர்வேலுடன், தமிழரசன் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது புகார் அளிக்க சென்ற அவரை பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் சாய்ராம் சக்திவேல் தரக்குறைவாக பேசி கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவல் ஆய்வாளர் சாய்ராம் சக்திவேல் இதேபோல் ஏற்கனவே மனு அளிக்க வந்த மனுதாரரை மிக தரக்குறைவாக பேசி அவரை போக்சோ வழக்கில் கைது செய்து விடுவேன் என மிரட்டியதால் அந்த நபர் குடும்பத்தோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்தார் என்றும் கதிர்வேல் தரப்பினர் காவல் ஆய்வாளர் மீது குற்றம்சாட்டினர்.
இதைத்தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகளிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்த நடத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக புதிய பேருந்து நிலைய வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே நியாயம் கேட்டு புகார் அளிக்க வரும் பொதுமக்களை அவதூறாக பேசி தாக்கும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் காவல்துறை மீது ஒரு அவநம்பிக்கை ஏற்படுத்துகிறது என்றும் இதில் அரசு உரிய நடிவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.