உத்தரப் பிரதேச மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு தலித் இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து, முதுகெலும்பை உடைத்து, நாக்கை அறுத்து கொடூரமாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அது பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அனைத்து தரப்பு மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவருகிறது. இதனைக் கண்டித்து, அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் போராட்டம் நடத்திவருகின்றன.
அந்தவகையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பெரியார் சிலை அருகில் மத்திய பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு பொறுப்பேற்று அம்மாநில முதலமைச்சர் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிட கழக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல, தஞ்சாவூரில், தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல மகளிரணி தலைவர் கலைச்செல்வி அமர்சிங் தலைமையில், மாவட்ட மகளிரணி தலைவர் அஞ்சுகம் பாக்கியம் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட. கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.