காலம், நேரம் கருதாமல் கடமையை மட்டுமே கருத்தாக கொண்டு உயிர் காக்கும் பணியில் அர்பணிப்போடு ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர் மருத்துவர்கள். கரோனா காலத்தின் கட்டாயம் பணிச்சுமை, மனச்சுமை, என சுமையை ஏற்றி கொண்டே அவர்களை சுமாராக கூட ஓய்வு எடுக்க அனுமதிக்கவில்லை.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகில் உள்ள செலவடை கிராமத்திலும் கரோனா பரவலின் தாக்கம் கோரத் தாண்டவமாடியுள்ளது. தனது சொந்த ஊரில் மக்கள் கரோனா நோயால் அவதியுற்று வருவதை அறிந்த, மருத்துவர் செல்வக்குமார் உடனே தான் பணியாற்றி வந்த சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையிலிருந்து ஒரு மாத காலத்திற்கு விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார்.
மக்களின் மருத்துவர் செல்வக்குமார்:
பின்பு செலவடை கிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தனது முயற்சியால் கரோனா சிகிச்சை மையத்தை உருவாக்கினார். தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளு்ககு அவர் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சிகிச்சை அளித்துவருகிறார். எடப்பாடி, ஜலகண்டபுரம், மேட்டூர், தாரமங்கலம் ஓமலூர் என 30க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள், செல்வகுமாரின் உதவியை நாடி வருகின்றனர்.
இரவு பகலாக பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மருத்துவர் செல்வகுமார் அளித்த பிரத்யேக பேட்டியில்,"எனது தந்தை சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் காலமானார். அவரின் இழப்புக் கொடுத்த ஆதங்கத்தில் நான் மருத்துவம் படித்தேன். அதனால் நான் படித்த மருத்துவம் சிக்கலான நேரத்தில் மக்களுக்கு உடனடியாக கிடைக்க வேண்டும், என்பதினால் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வந்த போதிலும் ஒரு மாதம் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்து உள்ளேன்.
எனது கிராமத்தில் உள்ளவர்கள் உறவினர்கள், நண்பர்கள். இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு உதவாமல் இருக்க என்னால் முடியவில்லை . கரோனா அச்சத்தை மக்களுக்கு போக்கிட வேண்டும். ஆரம்பக்கட்ட அறிகுறி எப்படிப்பட்டது என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும். சரியான நேரத்தில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதால் தற்போது நண்பர்களுடன் இணைந்து இந்த சிகிச்சை மையத்தில் நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் . நோய்தொற்று முழுமையாக மக்களை விட்டு நீங்கும் வரையில் எனது பணி தொடரும்" என்றார்.
'உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்'
எனும் திருக்குறளுக்கேற்ப கரோனா நோயாளிகளுக்கு காலம் கருதி சிகிச்சை அளித்து வரும் செல்வக்குமார் அக்கிராம மக்ககள் மனதில் துளிர் விட்ட நம்பிக்கை ஆவார். தனது சொந்த கிராம மக்கள் மட்டுமல்லாது சுற்று வட்டார பகுதி பகுதிகளுக்கும் சேவையாற்றி வரும் செல்வக்குமார் பணி தொடரட்டும்.