சேலம்: மாவீரன் தீரன் சின்னமலையின் 215ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி அமைச்சர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இணைந்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசை எதிர்த்து சுதந்திர போராட்டத்தை தீரத்துடன் நடத்தி, பின்னர் பிரிட்டிஷ் படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டையில் மாவீரன் தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்டார்.
அந்த நாளான ஆகஸ்ட் 2ஆம் தேதியில் அவரை பெருமைப்படுத்தும் வகையில் நினைவு தினமாக அறிவித்து, ஆண்டுதோறும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதனையொட்டி சேலம் மாவட்டம் சங்ககிரி மலைக்கோட்டை பகுதியில் வைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலையின் திருவுருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அதேபோல சங்ககிரி புறநகர் பகுதியில் ஈரோடு பிரிவு சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் உள்ள அவரின் திருவுருவப்படத்திற்கு, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, மக்களவை உறுப்பினர் சின்ராசு, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜா, மனோன்மணி, சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் உள்ள அவரின் திருவுருவப் படத்திற்கு திமுக, நாம் தமிழர் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, கொங்கு வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, தீரன் சின்னமலை பேரவை, கொங்கு இளைஞர் சங்கம், கொங்கு நாடு முன்னேற்ற கழகம், கொங்கு மக்கள் முன்னணி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்பைச் சேர்ந்தவர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.