சேலம்: சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பற்ற, தரம் குறைவான குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் சென்றது. இந்த புகாரினைத் தொடர்ந்து, 45 குடிநீர் ஆலைகளில் தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.
இந்த சோதனையில், 19 ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் தண்ணீர் பாதுகாப்பற்றது என தெரியவந்தது. இதில், 5 ஆலைகள் தரம் குறைவானவையாகவும், 4 ஆலைகள் போலி பெயரில் இயங்கிவந்ததாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. 16 குடிநீர் ஆலைகளின் மாதிரிகள் குடிக்கத் தகுதியானவை என தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், "மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஆலைகள் விதிமுறைகளை பின்பற்றிட வேண்டும் என்று ஏற்கனவே பலமுறை அறிவுறுத்தப்பட்டது. பல ஆலைகள் பாதுகாப்பற்ற முறையில் குடிநீர் விநியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 19 ஆலைகளின் மாதிரி குடிக்க பாதுகாப்பற்றவை என தெரியவந்துள்ளது. அந்த நிறுவனங்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 9 குடிநீர் ஆலை நிறுவனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை: 1 லட்சம் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் !