சேலம் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மீனாட்சி மொபைல்ஸ் என்ற செல்ஃபோன் கடையில் கடந்த வாரம் கணவன் மனைவி இருவர் வந்து செல்ஃபோன் விலை விசாரித்துவிட்டு செல்ஃபோனை வாங்காமல் சென்றுவிட்டனர்.
அன்று மாலையில் கடை உரிமையாளர் செல்ஃபோன் எண்ணிக்கையை சரி பார்த்தபோது, கணக்கில் ஒன்று குறைவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடையில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்தபோது கணவன் மனைவி இருவரும் செல்ஃபோன் விலை கேட்பது போல் நடித்து அதனை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கடை உரிமையாளர் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் செய்தார்.
இதையடுத்து கணவன்-மனைவி இருவரையும் கைது செய்ய பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் கந்தவேல் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், அன்பழகன், முரளி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் விசாரித்து செல்ஃபோன் திருடிய தாதகாப்பட்டியைச் சேர்ந்த நாகேந்திரன் (வயது 33), அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 26) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவர்களிடமிருந்து செல்ஃபோன், இவர்கள் திருட்டுக்கு பயன்படுத்திவந்த இருசக்கர வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த வாகனத்தில் பிரஸ் என்று எழுதப்பட்டும், வழக்கறிஞர் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டிருந்தது. இது தவிர நாகேந்திரனிடமிருந்து வழக்கறிஞர் என பெயரிட்ட சில விசிட்டிங் கார்டுகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் கணவனும் மனைவியும் சேர்ந்து வேறு எங்கெல்லாம் திருடியுள்ளனர் என்றும் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.