எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பழனிசாமி வனவாசியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "எடப்பாடி தொகுதி மக்களின் ராசிதான் என்னை முதலமைச்சர் நிலைக்கு உயர்த்தியுள்ளது. எத்தனைப் பிறவி எடுத்தாலும் எடப்பாடி தொகுதி மக்களை நினைவில் வைத்திருப்பேன்.
எடப்பாடி தொகுதியில் உள்ள ஒவ்வொருவரும் வேட்பாளர்கள் என்பதால், நான் நின்றால் நீங்கள் நிற்பது போலத்தான். எடப்பாடி தொகுதி, முதலமைச்சரின் தொகுதி என்பதை மறந்து உதயநிதி பேசுகிறார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் நிறைய திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்ததே முதலமைச்சராகிய நான்தான். ஸ்டாலின் தனது தொகுதியில் எதுவுமே செய்யவில்லை.
வனவாசியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை இந்தத் தேர்தல் திமுகவுக்கு இறுதித் தேர்தலாக அமையும். கடந்த நான்கு ஆண்டு காலமாக திமுக தலைவர் ஸ்டாலின் என்னை நிம்மதியாக ஆட்சிசெய்ய விடவில்லை. எனது மனத்தில் உள்ள குறைகளை குடும்பத்தில் ஒருவராக உள்ள தொகுதி மக்களிடம்தான் பகிர்ந்துகொள்ள முடியும் என்பதால்தான் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.திமுக தலைவர் ஸ்டாலின் தில்லுமுல்லு செய்து, நாடகம் நடத்தி, மக்களிடம் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காகப் புதிய நாடகத்தைப் போடுவார். அதை மக்கள் நம்பமாட்டார்கள்.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ஆறு அடி இடம் தரவில்லை என அனுதாபம் தேட ஸ்டாலின் போடும் நாடகம் எடுபடாது. காமராஜர், ஜானகிக்கு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்தார் கருணாநிதி.
அப்படி இருக்கும்போது அவருக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா என்பதற்கு மக்கள் நீதிபதியாக இருந்து நீதி சொல்லுங்கள். முன்னாள் முதலமைச்சர்களுக்கு இடம் இல்லை என்று கருணாநிதி எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார்.
அதைத்தான் நாங்களும் நடைமுறைப்படுத்தினோம். கிண்டியில் 150 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஏக்கர் நிலத்தைக் கொடுத்தேன். அவர்கள்தான் வேண்டாம் என மறுத்தார்கள்" என்று தெரிவித்தார்.