சேலம்: BJP flagpole removal issue: எடப்பாடி அருகே ஜலகண்டபுரத்தில் பொது இடத்தில் பாஜகவைச் சேர்ந்தவர்களால் புதியதாகக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இந்தக் கம்பம் ஜலகண்டபுரம் பேரூராட்சியின் அனுமதியைப் பெறாமல் அமைக்கப்பட்டதாகப் புகார் எழுந்ததுள்ளது.
இதனையடுத்து பேரூராட்சி நிர்வாகத்தால் கடந்த நான்கு நாள்களுக்கு முன் பாஜக கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இதனைக் கண்டித்து இன்று (ஜனவரி 3) பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவுசெய்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட இடத்தில் கூடினர்.
கொடிக்கம்பம் அகற்றம் - பாஜக ஆர்ப்பாட்டம்
முன்னதாக, கட்சியின் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் பாரதிய ஜனதா கட்சியினர் கொடிக்கம்பத்தை நட முயன்றனர். அதனை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கொடிக்கம்பத்தைப் பறிமுதல்செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லாத காரணத்தினால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் தலைமையிலான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, தடையை மீறி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழ்நாடு அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்களை எழுப்பினர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தடுத்து நிறுத்த காவலர்கள் முயற்சி செய்தனர். இதனால், பாஜகவினருக்கும் காவல் துறைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதிமுக நிர்வாகிகள் உள்பட 100 பேர் கைது
வாக்குவாதம் முற்றிய பின் தள்ளுமுள்ளாக மாறியது. இதனையடுத்து, எஸ்பி ஸ்ரீ அபிநவ் பாஜகவினரை வலுக்கட்டாயமாகத் தரதரவென இழுத்துச் சென்று கைதுசெய்தார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக வந்த அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர் என நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
அப்பகுதியில், பாஜக மாவட்ட நிர்வாகிகளை எஸ்பி கழுத்தைப் பிடித்து தரதரவென இழுத்துச் செல்லும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
இதையும் படிங்க: 'பொங்கல் பண்டிகைக்கு 20 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும்' - அமைச்சர் ராஜ கண்ணப்பன்