விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், வேலையில்லாக் கொடுமையைப் போக்கவேண்டும், பெருமுதலாளிகளுக்கு சலுகை செய்ய விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறிக்கக் கூடாது, தொழிலாளர் சட்டங்களில் தன்னிச்சையான திருத்தங்களை மத்திய அரசு செய்யக் கூடாது, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கக் கூடாது, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு முழுமையாகச் சமூகப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் 25 கோடி தொழிலாளர்களும், விவசாயிகளும் அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே நடைபெற்ற போராட்டங்களின் தொகுப்பை கீழே காணலாம்.
சேலம் மாவட்டம்:
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் சேலம் மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சி.ஐ.டி.யு. , ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யூ.சி., நீலமலை தோட்ட தொழிலாளர் சங்கம், கட்டுமான தொழிலாளர் சங்கம், சேர்வராய்ஸ் பொது தொழிலாளர் சங்கம், தொழிலாளர் விடுதலை முன்னணி, சத்துணவு பணியாளர் சங்கம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட சங்கத்தினர் கலந்துகொண்டனர்.
தேனி மாவட்டம்:
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து பல்வேறு தொழிற்சங்கத்தினர் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பெரியார் மின் உற்பத்தி நிலையத்தில் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம்:
அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. அந்த வகையில் கரூர் மாவட்டத்தில் மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளான காலியான இடங்களை நிரப்ப வேண்டும், ஐடிஐ படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் ஆகியவை முன்வைக்கப்பட்டன.