சேலம் அருகே இளம்பிள்ளையில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு, தனியார் பேருந்து ஒன்று சேலம் நோக்கி புறப்பட்டது. அப்போது, சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கந்தம்பட்டி பகுதியில் பேருந்து வந்த போது திடீரென பேருந்தின் பேட்டரியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டு, தீப்பிடிக்க தொடங்கியது.
உடனே சுதாரித்த பேருந்து ஓட்டுநர், தேசிய நெடுஞ்சாலையின் அருகே இருக்கக்கூடிய அணுகு சாலையின் ஓரத்தில் பேருந்தை நிறுத்தி, பயணிகள் அனைவரையும் உடனடியாக கீழே இறங்குமாறு எச்சரித்தார்.
முதலில் சிறிய அளவில் பற்றிய தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவத் தொடங்கி கொழுந்து விட்டு எரிந்தது. இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் செவ்வாப்பேட்டை மற்றும் சூரமங்கலம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும், இந்த விபத்தில் பேருந்து முழுவதும் தீயில் எரிந்து நாசமாகியது. தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால், சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
இதையும் படிங்க: 'தேசிய நெடுஞ்சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்'