கடந்த 2001 ஆம் ஆண்டு, அன்றைய பிரதமர் வாஜ்பாய் தான் பங்கேற்ற ஒரு விழாவில், பெண்ணின் காலில் விழுந்து வணங்கிய நிகழ்வு உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. பிரதமரே வணங்கும் அளவிற்கு அப்பெண் செய்ததுதான் என்ன? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என பத்திரிகைகள் தேடிக்கொண்டிருக்க, டெல்லியிலிருந்து தன் சொந்த ஊரான மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தார் சின்னப்பிள்ளை.
ஏழை மக்களை ஒருங்கிணைத்து மேற்கொண்ட வறுமை ஒழிப்புப் பணிகளுக்காக, பிரதமர் கொடுத்த அந்த அங்கீகாரத்திற்குப்பின், தமிழகம் அறிந்த மாபெரும் ஆளுமையாக சின்னப்பிள்ளை வலம் வருகிறார். மதுரை மாவட்டம் அப்பன்திருப்பதி அருகேயுள்ள பில்லுசேரி என்னும் குக்கிராமத்தில் வசித்து வரும் சின்னப்பிள்ளையிடம், உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பேசினோம். வறுமை ஒழிப்பு, கந்துவட்டியிலிருந்து விடுதலை, குடிபோதை மீட்பு, வரதட்சணை கூடாது என்ற நான்கு முக்கிய கொள்கைகளை முன்வைத்து உருவாக்கிய, களஞ்சிய இயக்கத்தை பற்றி அவர் கூறினார்.
உலகப் பெண்கள் தினத்தில் தான் சொல்ல விரும்புவது, ஒவ்வொரு பெண்ணுக்கும் கல்வி தான் மிகவும் அத்தியாவசியமானது என்றார். சமூகத்தளைகளான மது, கந்து வட்டி ஆகியவற்றை முற்றுமாக ஒழிக்கத் துணிவதோடு, பெண்கள் அனைவரும் வரதட்சணை வாங்கவோ, கொடுக்கவோ மாட்டோம் என சூளுரை ஏற்க வேண்டும் என்றும் சின்னப்பிள்ளை வேண்டுகோள் விடுத்தார்.
மத்திய அரசின் ஸ்த்ரீ சக்தி புரஷ்கார் விருது, தமிழக அரசின் பொற்கிழி மற்றும் அவ்வையார் விருது, பத்மஸ்ரீ விருது எனப் பெற்றிருந்தாலும், அதன் எந்த கணமுமின்றி அதே எளிமையுடன் இருக்கிறார் சின்னப்பிள்ளை. வயது முதிர்வால் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தாலும், இன்னமும் அதே சிந்தனையிலேயே இருப்பதாகவும், சமூகப் பிரச்சனைகள் தீர அதனை பெண்கள் கையில் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார், பெண்ணினத்தின் மூத்தப்பிள்ளையாம் சின்னப்பிள்ளை.