மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கீழடி கிராமத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு தொல்லியல் கண்காணிப்பாளராக இருந்து வழி நடத்தியவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த, குறிப்பாக மதுரை மண்ணின் மைந்தரான அமர்நாத் ராமகிருஷ்ணா.
அகழாய்வுப் பணிகள்:
அமர்நாத் தலைமையில் நடைபெற்ற இரண்டு கட்ட அகழாய்வில் பல்லாயிரக்கணக்கான தொல்லியல் பொருட்களும், சின்னங்களும் கண்டறியப்பட்டன. அவற்றின் தொன்மை கிமு 2 - 3ஆம் நூற்றாண்டுகளுக்கு முற்பட்டவையாக அறியப்பட்டுள்ளன. மேலும் இரண்டாம் கட்ட அகழாய்வில் அங்கு மிகப்பெரும் சாயத் தொழிற்சாலை இருந்ததற்கான கட்டிடங்களும் கண்டறியப்பட்டன. இக்கண்டுபிடிப்பு உலக அளவில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் கீழடி அகழாய்வின் பக்கம் உலக தொல்லியல் ஆய்வாளர்களின் பார்வை திரும்பியது. கீழடி கிராமத்தில் நடைபெற்ற ஆய்வின்போது பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர் என அனைவரும் நாள்தோறும் பார்வையிடும் வண்ணம் சிறப்பான அனுமதியையும் அமர்நாத் ராமகிருஷ்ணன் வழங்கியிருந்தார். இதனால் கீழடி அகழாய்வு குறித்த தகவல்கள் ஒவ்வொரு நாளும் வெளியுலகிற்கு தொடர்ந்து தெரியத் தொடங்கின.
மூன்றாம் கட்ட அகழாய்வு:
இந்நிலையில், 3ஆம் கட்ட அகழாய்வின்போது அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் கீழடியில் பணியமர்த்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மறுக்கப்பட்ட அனுமதி:
தற்போது அசாம் மாநிலத்தில் பணிபுரிந்து வரும் அமர்நாத் ராமகிருஷ்ணா, கடந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள வட அமெரிக்க தமிழ்ச் சங்கமான ”ஃபெட்னா 2018” நிகழ்வில் பங்கேற்க அழைக்கப்பட்டார். அந்த நிகழ்வில் பங்கேற்க இந்திய தொல்லியல் துறை அனுமதி மறுத்தது. அமெரிக்காவில் உள்ள தமிழ்ச் சங்க விழாவில் பங்கேற்க அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் தொல்லியல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அனுமதி வேண்டி கடிதம்:
இதற்கிடையே வருகின்ற ஜூலை 4, 5, 6, 7ஆம் தேதிகளில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் நடத்தவுள்ள 'ஃபெட்னா 2019' நிகழ்வில் 'கீழடி நம் தாய்மடி' என்ற தலைப்பில் காட்சியகம் ஒன்றை நடத்தவிருக்கின்றனர். இக்குறிப்பிட்ட நிகழ்வில் பங்கேற்பதற்காக ஃபெட்னா நிர்வாகிகள் அமர்நாத் ராமகிருஷ்ணாவிற்கு இந்தாண்டு அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிகழ்வில் பங்கேற்க இந்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கோரி அமர்நாத் ராமகிருஷ்ணா இரண்டு கடிதங்கள் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை அனுமதித்தோ அல்லது அனுமதி மறுத்தோ எந்தவித பதிலும் தராமல் இழுத்தடித்து வருவதாக மத்திய தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகத் தமிழர்ப் பார்வையில்:
இதுகுறித்து அமெரிக்கவாழ் ஃபெட்னா நிர்வாகிகளில் ஒருவரான கார்த்திக் என்பவரைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம். அப்போது அவர் கூறியதாவது, 'கடந்த ஆண்டு அமர்நாத் ராமகிருஷ்ணாவை 'ஃபெட்னா 2018' விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தோம். ஏனோ அவரால் வர இயலவில்லை. இந்த ஆண்டு கீழடி ஆய்வு குறித்து 'கீழடி நம் தாய்மடி' எனும் தலைப்பில் சிறப்பு காட்சியகம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதன் காரணமாக அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு நாங்கள் அழைப்பு விடுத்துள்ளோம்.