மதுரை மாவட்டம் சமயநல்லூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாரதி என்பவர் கடந்த 2011ஆம் ஆண்டு தனது அத்தை மகளான சந்தியா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்தின் போது சந்தியாவிற்கு 108 சவரன் தங்க நகைகள் மற்றும் ஐந்து லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் தருவதாக மணப்பெண் வீட்டினர் பேசியதாகத் தெரிகிறது. திருமண நாளன்று 70 சவரன் தங்க நகைகள் மற்றும் ஐந்து லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை மட்டுமே மணப்பெண் வீட்டினர் வழங்கியுள்ளனர்.
திருமணமாகி 3 மாதங்களில் மீதமுள்ள நகைகள் மற்றும் கார் வாங்கி வருமாறு மணப்பெண்ணைக் கணவர் பாரதி மற்றும் அவருடைய குடும்பத்தினர் துன்புறுத்தியதால் மணப்பெண் தனது தாய் வீட்டிற்கே திரும்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், இந்த தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தும், 7 வருடங்களாக இருவரும் தனித் தனியே வசித்து வருகின்றனர். பாரதி குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது.
தற்போது கணவர் பாரதி அதே பகுதியில் உள்ள பள்ளி சிறுமியை ரகசிய திருமணம் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டி மதுரை சமயநல்லூர் காவல் நிலையத்தில் சந்தியா புகார் அளித்துள்ளார். இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தன்னை கணவரிடம் சேர்த்து வைக்கக்கோரி பாரதி வீட்டின் முன்பு சந்தியா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனை அறிந்த மணமகன் வீட்டினர், பெண் என்றும் பாராமல் சந்தியாவை அடித்துத் துரத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயநல்லூர் காவல் துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.