மதுரை: கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிதணிக்கைகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அம்மனுவில், " தமிழ்நாட்டில் 1978ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
இதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 13 தொகுதி கல்லூரிகள், 593 அரசு, தனியார் கல்லூரிகள் செயல்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா 2018 ஆம் ஆண்டு பதவியேற்று பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணை இயக்குனர் சக்திநாதன், துணைவேந்தர் சூரப்பா ஆகியோர் மீது முதலமைச்சரின் தனிப்பிரிவில், இணையதளம் மூலமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புகாரில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.200 கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட 13 தொகுதி கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்ததில், ஒவ்வொரு ஆசிரியரிடமும் ரூ.13 முதல் 15 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் துணைவேந்தர் சூரப்பா சட்டவிரோதமாக தனது மகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி அமர்த்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரை திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் மின்னஞ்சல் மூலம் கொடுத்துள்ளார்.
புகார்தாரர் கொடுத்துள்ள முகவரி, தொலைபேசி எண் ஆகிய அனைத்தும் போலியாக உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா அவர்களின் மகள் பகுதிநேர பேராசிரியராக (Guest Lecturer) பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகாரில் உண்மை தன்மை இல்லை.
இந்த நிலையில், துணைவேந்தர் சூரப்பா மீது உள்ள புகாரை விசாரணை செய்வதற்காக உயர்கல்வித்துறைத் தலைமைச் செயலர், நவம்பர் 11ஆம் தேதி அரசாணை வெளியிட்டார்.
இந்த அரசாணையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை ஆணையம் நியமித்து விசாரணை செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, இந்தியாவில் மிகப்பெரிய பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தில் பெயரை கலங்கப்படுத்துவதாகவும் அதில் மிக உயர்ந்த பதவியில் இருப்பவர்களை கலங்கபடுத்துவதாகவும் உள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தரை விசாரணை செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு மட்டுமே உள்ளது. உயர் அதிகாரி மீது புகார் கொடுக்கப்பட்டால் நோட்டீஸ் அனுப்பிய பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்யாமல் உயர்கல்வித் துறை தலைமை செயலர் அரசாணை வெளியிட்டு அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை செய்வது ஏற்கத்தக்கதல்ல.
எனவே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த இடைக்கால தடை விதிக்கவும், உயர்கல்வித்துறை தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், அண்ணா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கீழ் வராது. வழக்கு பல்கலைக்கழகம் சம்பந்தப்பட்டது என்பதால் வழக்கை பொதுநல வழக்காக விசாரிக்க முடியாது என்றார்.
துணை வேந்தர் சூரப்பா தரப்பு வழக்கறிஞர், அண்ணா பல்கலைக்கழகம் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இருந்தாலும், அதன் உறுப்பு கல்லூரிகள் பெரும்பாலானவை தென் தமிழகத்திலேயே அமைந்துள்ளன. எனவே உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த வழக்கை விசாரிக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளது என வாதாடினார். தொடர்ந்து இந்த விசாரணை ஆணையம் அமைத்ததில் வேந்தருக்கு விருப்பமில்ல என துணைவேந்தர் சூரப்பா தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தன்னை இந்த வழக்கில் சேர்க்க கூறியதை நீதிமன்றம் ஏற்கிறது. துணைவேந்தர் சூரப்பாவை இந்த வழக்கில் இரண்டாவது மனுதாரராக நீதிமன்றம் சேர்க்கிறது எனக் கூறி, இந்த வழக்கை சென்னை முதன்மை அமர்வுக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'ஆற்றை மாசுப்படுத்தும் நபர்களை தண்டிக்க அரசு என்ன செய்துள்ளது'- நீதிமன்றம் கேள்வி!