இதுகுறித்து இன்று (மே.31) அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:
"அரசு இராசாசி மருத்துவமனையால் மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படும் இலவச கரோனா தடுப்பூசி மையத்தில் தற்போது வரை 18 வயதிற்கு மேல் உள்ள 72 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இம்மையத்தில் நாள்தோறும் 1,500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
முதன்முறையாக...
கரோனா தடுப்பு முறையில் முக்கியமான தூணாக அமைவது சமூக இடைவெளி. இதனைக் கருத்தில் கொண்டு அரசு இராசாசி மருத்துவமனையும் கோவிட் இல்லா மதுரை என்ற பொதுமக்கள் அமைப்பும் இணைந்து கரோனா தடுப்பூசிக்காக உதவி எண் மூலம் முன்பதிவு செய்யும் சேவையை தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக ஜூன் இரண்டாம் தேதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது.
தொலைபேசி மூலம் முன்பதிவு
இதன்மூலம், 18 வயதிலிருந்து 44 வயதுக்கு உள்பட்டோரும், 45 வயதுக்கு மேற்பட்டோரும் 7823995550 என்ற உதவி எண்ணுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தொடர்புகொண்டு கோவிஷீல்டு / கோவாக்சின் முதல், இரண்டாம் தவணைக்கான தேதி, நேரம் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்த பிறகு அழைப்பு பெறப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு தடுப்பூசி போட வேண்டிய தேதி, நேரம் ஆகியவை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மதுரை இளங்கோ மேல்நிலைப்பள்ளியில் அரசு இராசாசி மருத்துவமனை சார்பில் நடத்தப்படும் கரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்று குறுஞ்செய்தியை காண்பித்து, தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தொற்று தொடர்பான அரசின் தகவலில் முரண்பாடு' - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்