மதுரை: பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கும் வகையில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் பேசினார்.
அவர் பேசுகையில், 'இலங்கைத் தமிழர்களுக்காக பாஜக தலைமையிலான மோடி அரசு மட்டுமே பாடுபடுகிறது. இதுவரை 60,000 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளோம். 8 ஆண்டுகளில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை மீட்டுக் கொண்டு வந்தது மோடி அரசுதான். தற்போது இலங்கை சிறையில் ஒரு தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் கூட இல்லை என்பதை பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் 70 ஆயிரம் புதிய தொழில்முனைவோர்கள் உருவாகியுள்ளனர். இளைஞர்கள் ஏழைகளின் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகிறோம். கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு நாட்டின் பொருளாதாரத்தையும் கண்காணித்துள்ளோம். இத்தனை சிக்கல்களுக்கு இடையிலும் பெட்ரோல், டீசல் விலையில் எட்டு ரூபாயை குறைத்து சாதனை படைத்துள்ளது, மோடி அரசு.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை:தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்துள்ள திமுக, தேர்தலின்போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை. தமிழ்நாட்டில் பாஜக தலைவராக அண்ணாமலை இருக்கும் வரை, திமுக இனி ஊழல் செய்ய முடியாது. தங்களது குடும்பத்தினருக்காக திமுக சொத்துக்களை சேர்த்து வருகிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 70 ஐஏஎஸ் அலுவலர்களை மாற்றியுள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் அண்ணாமலை திமுக அரசின் ஊழலை வெளிக்கொண்டு வந்துள்ளார். அந்த ஐஏஎஸ் அலுவலர்களை நம்பி அண்ணாமலை அரசியல் செய்யவில்லை.
பாமர மக்களுக்காக., ஏழை எளிய மக்களுக்காக இருந்து வரும் அண்ணாமலை தமிழ்நாட்டு மக்களுக்கான அரசியல் நடத்துகிறார்.
இந்தியா முதன்மை நாடாக மாற வேண்டுமானால் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டும். வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு பெரும் ஆதரவு தருவார்கள். தற்போதைய ஊழல் அரசை தூக்கி எறிவார்கள்’ என்றார்.
அதனைத் தொடர்ந்து அக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ’போர் நடைபெற்ற உக்ரைனில் இருந்து 1068 குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. தற்போது இலங்கை சிறையில் தமிழ்நாடு மீனவர்கள் ஒருவர் கூட இல்லை என்ற நிலையை உருவாக்கிய பிரதமர் மோடிக்கும் வெளியுறவு இணையமைச்சர் முரளிதரனுக்கும் நாம் நன்றி தெரிவிக்க வேண்டும்’ எனக் கூறினார்.
’சினிமா மாடல் போன்று நடித்து வருவதால் திமுக மாடல் என்று கூறி வருகின்றனர். குற்றவாளிகள் தமிழ்நாட்டில் வெளிப்படையாகவே குற்றச் செயல்களைப் புரிய தொடங்கியுள்ளனர். கூட்டுப்பாலியல், வழிப்பறி கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளன’ எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பல பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:100ஆவது வயதில் அடியெடுத்து வைக்கும் பிரதமரின் தாய்...!