மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவுகள் முழுவதுமாக வெளியாகியுள்ள நிலையில், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கான பதவிகளில் திமுக 92 இடங்களிலும், ஆளும் அதிமுக 89, சுயேச்சைகள் 14, அமமுக 7, காங்கிரஸ் 4, பாஜக 3, தேமுதிக 3 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன.
இதே பதவிக்கு போட்டியின்றி சுயேச்சைகள் இரண்டு பேர் தேர்வாகியுள்ளனர். அதேபோன்று மாவட்ட கவுன்சிலர்களுக்கான பதவிகளில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9, பார்வர்டு பிளாக் 1 இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.
கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான 420 இடங்களில் 394 பேர் வெற்றிபெற்றுள்ளனர். மீதமுள்ள 26 பேர் போட்டியின்றித் தேர்வுபெற்றவர்களாவர். கிராம ஊராட்சி கவுன்சிலருக்கான மூன்றாயிரத்து 273 இடங்களில் இரண்டாயிரத்து 299 பேர் வெற்றிபெற்றுள்ளனர்.
972 பேர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். இரண்டு இடங்களுக்கான முடிவுகள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருக்கான தேர்தலில் 11ஆவது வார்டில் திமுக சார்பாக வெற்றிபெற்ற முத்துராமன் 21 ஆயிரத்து 698 வாக்குகள் பெற்று அதிக வாக்குகள் பெற்ற வெற்றி வேட்பாளராக முதலிடத்தில் உள்ளார்.
முதலாவது வார்டில் சுயேச்சையாக நின்ற காசிமாயன் ஐந்தாயிரத்து 914 வாக்குகள் பெற்று குறைந்த வாக்குகள் பெற்று வெற்றி வேட்பாளராக கடைசி இடத்தில் உள்ளார்.
முக்கியத்துவம் வாய்ந்த ஊராட்சி ஒன்றிய வார்டுக்கான போட்டியில் ஏழு கவுன்சிலர் பதவிகளைக் கைப்பற்றி, பெரிதாகக் கூட்டணிக் கட்சிகள் ஏதுமின்றி அமமுக வெற்றிபெற்றுள்ளது திமுக, அதிமுகவினரை அதிர்ச்சியடையவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தேர்தலில் மனைவி தோல்வி: மாரடைப்பில் கணவர் உயிரிழப்பு!