சிவகங்கை: கீழடியில் தமிழ்நாடு தொல்லியல் துறையின் சார்பாக ஏழாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடி அருகேயுள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
அண்மையில் சுடுமண் உறை கிணறுகள், குறுவாள், கருப்பு சிவப்பு பானைகள், மனித எலும்புக்கூடுகள் ஆகியவை மேற்கண்ட அகழாய்வுக் களங்களில் கண்டெடுக்கப்பட்டன. அதேபோன்று சுதை மண்ணால் ஆன மனித உருவங்களும் அகழாய்வில் கிடைத்தன.
2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது
இந்நிலையில், அகரத்தில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் சுடுமண் முத்திரை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. வணிக நோக்கங்களுக்காகவும், வேறு சில பயன்பாட்டிற்காகவும் அந்தக் காலத்தில் இதுபோன்ற சுடுமண் முத்திரைகளை பயன்படுத்துவது வழக்கம். இவை சற்றேறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் தொல்லியல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இது குறித்து தமிழ்நாடு தொழில் துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.