விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பிலான திமுகவின் பரப்புரை கூட்டம் இரண்டாவது நாளாக இன்றும் மதுரையில் நடைபெற்றது. மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்களை சந்தித்து, அவர்களது குறைகளை அக்கட்சியின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி கேட்டறிந்தார். அதன்படி, செல்லூர் பகுதியில் உள்ள நெசவு தொழிலாளர்களையும், சுய உதவிக்குழு பெண்களையும் சந்தித்து கனிமொழி உரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக ஆட்சியில் கொண்டு வந்த பாலங்கள் தவிர, இங்கு வேறு எந்த பாலங்களையும் அதிமுக அரசு கட்டவில்லை. 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் என்ன ஆனது என்றே தெரியவில்லை. பல்வேறு இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இங்கே அடிக்கல் மட்டுமே நாட்டப்பட்டுள்ளது.
மதுரையில் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை வைக்க தாங்கள்தான் அனுமதி கொடுத்தோம் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறுகிறார். ஆனால், கருணாநிதி மறைவின்போது மெரினாவில் இடம் கிடைக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்தார்கள் என்று அனைவருக்குமே தெரியும்.
மக்கள் தெளிவாக உள்ளனர், ஆட்சி மாற்றம் வரவேண்டும் என்று. திமுக ஆட்சிக்கு வரவேண்டும், ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என விரும்புகின்றனர். முக்கியமாக பெண்கள்தான் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று தீவிரமாக உள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: அமைச்சர் சிவி சண்முகம் பேசியதாக பொய் பரப்புரை: 2 பேரிடம் விசாரணை!